விவசாயிகளின் வாழ்க்கைக்கு உத்தரவாதம் கொடுக்க சாத்தியமில்லையா?- காங்கிரசுக்கு குமாரசாமி கேள்வி

5 இலவச திட்டங்களை நிறைவேற்றி இருப்பதாக கூறும் காங்கிரசால், விவசாயிகளின் வாழ்க்கைக்கு உத்தரவாரம் கொடுக்க சாத்தியமில்லையா? என்று முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி கேள்வி எழுப்பி உள்ளார்.

Update: 2023-09-16 18:45 GMT

பெங்களூரு:-

முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-

காங்கிரசால் சாத்தியமில்லையா?

தினமும் காலையில் எழுந்து பத்திரிகைகளை படிக்கும் போதும் விவசாயிகளின் தற்கொலை செய்திகளை பார்த்து கண்களில் நீர் வருகிறது. இன்னும் எத்தனை நாட்கள் இதுபோன்று விவசாயிகளின் தற்கொலையை பார்க்க வேண்டும். மாநிலத்தில் காங்கிரஸ் அரசு அமைந்ததில் இருந்து ஊழல், முறைகேடுகள் நடக்கிறது. அதிகார சுகம் அனுபவிக்கும் காங்கிரசால் விவசாயிகளின் தற்கொலையை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன?.

5 இலவச திட்டங்களை நிறைவேற்றி இருப்பதாகவும், நாங்கள் சொன்னபடி உத்தரவாதங்களை நிறைவேற்றி உள்ளதாகவும் காங்கிரஸ் தலைவர்கள் கூறி வருகின்றனர். இலவச

திட்டங்களை நிறைவேற்றி இருப்பதாக கூறும் காங்கிரசால் விவசாயிகளின் வாழ்க்கைக்கு உத்தரவாதம் கொடுக்க சாத்தியமில்லையா?. இது தான் கர்நாடக மாதிரியா?. மாநிலத்தில் விவசாயத்துறை என்ற ஒன்று இருக்கிறதா? இல்லையா? என்பதே தெரியவில்லை.

தற்கொலை செய்ய வேண்டாம்

மாநிலத்தில் பல தாலுகாக்கள் வறட்சியின் பிடியில் சிக்கி உள்ளது. ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களில் குறைந்த அளவே மழை பெய்துள்ளது. விவசாய பயிர்கள் சேதம் அடைந்துள்ளது. விவசாயிகளின் மீது உண்மையாக அக்கறை இருந்திருந்தால், மத்திய அரசிடம் இருந்து உடனடியாக நிவாரணம் பெற்று விவசாயிகளுக்கு காங்கிரஸ் அரசு கொடுத்திருக்க வேண்டும். வறட்சி பாதித்த தாலுகாக்களில் விதிமுறைகளை பின்பற்றுவது குறித்து பேசி அரசு காலம் கடத்தி வருகிறது.

மத்திய அரசிடம் இருந்து நிவாரணத்தை எதிர்பார்க்காமல் உடனடியாக மாவட்ட கலெக்டர்களின் வங்கி கணக்குகளில் இருக்கும் பணத்தை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். எனது வேண்டுகோள் ஒன்றே ஒன்று தான், விவசாயிகள் யாரும் தற்கொலை செய்ய வேண்டாம். அதுபோன்ற ஒரு முடிவை எடுக்க கூடாது. நீங்கள் (விவசாயிகள்) எடுக்கும் முடிவு உங்களது குடும்பத்தை அனாதை ஆக்கி விடும்.

இவ்வாறு குமாரசாமி கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்