கள்ளக்காதலை கைவிட வலியுறுத்தியதால்

கள்ளக்காதலை கைவிட வலியுறுத்தியதால் பெண்ணை கழுத்தை நெரித்து கொலை செய்த அவரது கணவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Update: 2023-03-28 22:00 GMT

கொள்ளேகால்:-

கள்ளத்தொடர்பு

சாம்ராஜ்நகர் தாலுகா முட்னாகூடு கிராமத்தை சேர்ந்தவர் மகேஷ் சந்திரகுரு. இவரது மனைவி சவுமியா (வயது 27). இவர்களுக்கு கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு 5 வயதில் மகள் உள்ளாள். இந்த நிலையில் மகேசுக்கும், இதேப்பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் அவர்களின் கள்ளக்காதல் விவகாரம் மகேசின் மனைவி சவுமியாவுக்கு தெரியவந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், கள்ளத்தொடர்பை கைவிடும்படி கணவரிடம் தெரிவித்துள்ளார். ஆனால் மகேஷ், கள்ளத்தொடர்பை கைவிட மறுத்ததாக தெரிகிறது. இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

கொலை

இந்த நிலையில் நேற்று முன்தினமும் கணவன்-மனைவி இடையே கள்ளத்தொடர்பு விவகாரம் தொடர்பாக தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த மகேஷ், மனைவி சவுமியாவின் கழுத்தை பிடித்து நெரித்துள்ளார். இதில், அவர் மூச்சுத்திணறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றிய தகவல் அறிந்ததும் சாம்ராஜ்நகர் புறநகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.

பின்னர் போலீசார், கொலையான சவுமியாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், கள்ளத்தொடர்பு விவகாரத்தில் மனைவி சவுமியாவை மகேஷ் கழுத்தை நெரித்து கொலை செய்தது தெரியவந்தது.

கைது

இதையடுத்து சாம்ராஜ்நகர் புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மகேசை கைது செய்தனர். மேலும் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சவுமியா கொலை செய்யபட்டதாலும், மகேஷ் கைது செய்யப்பட்டதாலும் அவர்களின் 5 வயது மகள் அனாதையாகி உள்ளாள். அந்த சிறுமியை போலீசார் காப்பகத்தில் ஒப்படைத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்