சக்லேஷ்புரா ராணுவ முகாமில் மதிய உணவு சாப்பிட்ட 35 ராணுவ வீரர்களுக்கு வாந்தி, மயக்கம்
சக்லேஷ்புராவில் ராணுவ முகாமில் மதிய உணவு சாப்பிட்ட 35 ராணுவ வீரர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ஹாசன்:
சக்லேஷ்புராவில் ராணுவ முகாமில் மதிய உணவு சாப்பிட்ட 35 ராணுவ வீரர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ராணுவ முகாமில் உணவு சாப்பிட்டனர்
ஹாசன் மாவட்டம் சக்லேஷ்புரா தாலுகா கடுகரவள்ளியில் ராணுவ வீரர்கள் முகாம் உள்ளது. இந்த முகாமில் ராணுவத்தில் புதிதாக சேர்ந்த வீரர்களுக்கு வாகனம் ஓட்டும் பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த பயிற்சியில் ஏராளமான ராணுவ வீரர்கள் கலந்து கொண்டனர். இந்த நிலையில் வழக்கம்போல நேற்று முன்தினம் ராணுவ வீரர்கள் அனைவரும் முகாமில் மதிய உணவு சாப்பிட்டனர். அப்போது அவர்களில் சிலருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது.
அனைவரும் ஒருவர் பின் ஒருவர் மயங்கி கீழே விழுந்தனர். இதனால் ராணுவ முகாமில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதை பார்த்த சக ஊழியர்கள், உடனே இது குறித்து ராணுவ முகாமில் உள்ள உயர் அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அதிகாரிகள் மயங்கி விழுந்த அனைவரையும் மீட்டு சக்லேஷ்புரா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மொத்தம் 35 பேருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
போலீசார் தீவிர விசாரணை
ஆனால் யாருடைய உயிருக்கும் ஆபத்து இல்லை என்று டாக்டர்கள் கூறியுள்ளனர். இதற்கிடையில் இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த சக்லேஷ்புரா பா.ஜனதா எம்.எல்.ஏ. சிமெண்ட் மஞ்சு, பாதிக்கப்பட்ட ராணுவ வீரர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். பின்னர் இது குறித்து சக்லேஷ்புரா போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. விரைந்து வந்த போலீசார் ஆஸ்பத்திரிக்கு சென்று பாதிக்கப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் 35 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டிருப்பது தெரியவந்தது.
இதையடுத்து ராணுவ முகாமிற்கு சென்ற போலீசார் ராணுவ வீரர்கள் சாப்பிட்ட உணவை எடுத்து ஆய்விற்காக அனுப்பி வைத்தனர். இந்த வாந்தி, மயக்கத்திற்கான காரணம் தெரியவில்லை. உணவு விஷமாக மாறியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதற்கிடையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.