பம்பை ஆற்றில் வெள்ளப்பெருக்கு; சபரிமலை செல்ல பக்தர்களுக்கு தடை
பம்பை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதையடுத்து சபரிமலை செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
பாலக்காடு,
கேரள மாநிலத்தில் பருவ மழை தீவிரமடைந்துள்ளது. அங்குள்ள கோட்டயம் மாவட்டத்தில் நேற்று மதியம் 12 மணி முதல் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது. மேலும் பல்வேறு இடங்களில் மண்சரிவு ஏற்பட்டது. இதனால் வீடுகள் உள்பட கட்டிடங்கள் சேதம் அடைந்தது. மேலும் அனைத்து நீர்நிலைகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
ஆலுவா நகரில் ஆங்காங்கே மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன. இதன் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் சூறாவளி காற்றுக்கு 20-க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்தன. இதனால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. ஆலுவா-காலடி சாலையில் ராட்சத மரம் சாய்ந்து விழுந்தது.
இதேபோன்று சாலக்குடி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இதையடுத்து கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மேலும் பம்பை ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் நேற்று பிற்பகலுக்கு பிறகு சபரிமலை சன்னிதானம் செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டது.
கோட்டயம், பத்தனம்திட்டா, ஆலப்புழை, பாலக்காடு, திருச்சூர் ஆகிய பகுதிகளில் மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டு இருந்தது. ஆனால் மழை அதிகம் பெய்ததால், ரெட் அலர்ட் விடப்பட்டது.