விஜயாப்புரா மாவட்டத்தில் 100 கிராமங்களுக்கு வெள்ள அபாய பீதி
வடகர்நாடகத்தில் கொட்டி தீர்த்த கனமழையால் விஜயாப்புரா மாவட்டத்தில் 100 கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கும் பீதி ஏற்பட்டுள்ளது.
பெங்களூரு:
கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை முடிவடைந்த நிலையில், தற்போது வடமேற்கு பருவமழை பெய்து வருகிறது. குறிப்பாக வடகர்நாடக பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இரட்டை மாநகரான உப்பள்ளி-தார்வார், யாதகிரி, விஜயாப்புரா, ஹாவேரி, கதக் ஆகிய பகுதிகளில் மழையின் தாக்கம் அதிகமாக உள்ளது.
தாவணகெரேயில் பெய்து வரும் கனமழையால் ஜகலூர் தாலுகா மிடிசோடி என்ற கிராமத்தில் ஜனதா காலனியில் 100-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் அந்த வீடுகளில் வசித்து வந்த மக்கள் கடும் அவதி அடைந்தனர். யாதகிரி மாவட்டம் சுராப்புரா தாலுகா நாகனூர் உள்ள கிராமத்தில் ஒரு விவசாயி வீட்டின் அருகே உள்ள கொட்டகை இடிந்து விழுந்ததில் 4 மாடுகள் பரிதாபமாக செத்தன. விஜயாப்புரா மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் தோனி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதனால் திகோட்டா, தாலிகோட், பசவனபாகேவாடி, பபலேஸ்வரா ஆகிய தாலுக்காக்களில் 100-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு வெள்ள அபாய பீதி ஏற்பட்டு உள்ளது. இதுதவிர வடகர்நாடகத்தில் பல ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்ட சோளம், மக்காசோளம் பயிர்கள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டு சேதம் அடைந்தன.