ஹர் கர் திரங்கா' இயக்கத்துக்காக சீனாவில் இருந்து தேசிய கொடி இறக்குமதி- காங்கிரஸ் கட்சி குற்றச்சாட்டு
'ஹர் கர் திரங்கா' இயக்கத்துக்காக சீனாவில் இருந்து தேசிய கொடி இறக்குமதி செய்யப்படுவதாக காங்கிரஸ் கட்சி குற்றச்சாட்டி உள்ளது.
மும்பை,
நாட்டின் 75-வது சுதந்திர தினத்தையொட்டி மத்திய அரசு 'ஹர் கர் திரங்கா' இயக்கத்தை தொடங்கி உள்ளது. இதன் மூலம் ஒவ்வொரு வீட்டிலும் தேசிய கொடியை ஏற்ற விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மராட்டியத்தில் மாநகராட்சி, மாவட்ட நிர்வாகங்கள் சார்பில் வீடு தோறும் தேசிய கொடி வழங்கப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் 'ஹர் கர் திரங்கா' இயக்கத்துக்கு சீனாவில் இருந்து தேசிய கொடிகள் இறக்குமதி செய்யப்படுவதாக மாநில காங்கிரஸ் தலைவர் நானா படோலே குற்றம் சாட்டி உள்ளார். இதுகுறித்து புல்தானாவில் காங்கிரஸ் சார்பில் நடந்த 'ஆசாடி கவுரவ் பாதயாத்ரா' போராட்டத்தில் அவர் பேசியதாவது:- ஆங்கிலேயா் ஆட்சி அகற்ற நீண்ட போராட்டம் நடந்தது. காங்கிரசின் கொடி மற்றும் எல்லோரையும் சுதந்திரத்திற்காக ஒன்று சேர்க்க வேண்டும் என்ற அதன் சிந்தனையின் கீழ் நாடு ஒன்று சேர்க்கப்பட்டது. சுதந்திரத்திற்காக எதையும் செய்யாதவர்கள் தற்போது 'ஹர் கர் திரங்கா' இயக்கத்தை நடத்துகிறார்கள். இந்த இயக்கத்துக்காக சீனாவில் இருந்து தேசிய கொடிகள் இறக்குமதி செய்யப்படுகிறது. இது தேசிய கொடிக்கும், சுதந்திர போராட்ட வீரர்களுக்கும் அவமரியாதையாகும்.
நாடு சுதந்திரம் அடைந்த போது இங்கு ஊசி கூட தயாரிக்கப்படவில்லை. நேருவின் தொலைநோக்கு பார்வையால் நாடு வளர்ச்சியில் உச்சத்தை தொட்டது. இந்திரா காந்தியும், ராஜீவ் காந்தியும் வெற்றிகரமாக நாட்டை வளர்ச்சிபாதையில் கொண்டு சென்றனர். நரசிம்ம ராவும், மன்மோகன்சிங்கும் பல திட்டங்களை நிறைவேற்றினர். இந்திராவும், ராஜீவும் நாட்டுக்காக உயிரையே கொடுத்தனர்.
ஆனால் தற்போதைய பா.ஜனதா அரசு காங்கிரசால் அமைக்கப்பட்ட பொதுத்துறை நிறுவனங்களையும், நாட்டின் புகழயைும் விற்று வருகிறது. சீனா நமது எல்லை ஆக்கிரமித்து வருகிறது. ஆனால் பிரதமர் மோடி அதை பற்றி பேசாமல், அவர்கள் நாட்டில் இருந்தே தேசிய கொடியை இறக்குமதி செய்கிறார். இவ்வாறு அவர் பேசினார்.