மீன்பிடி வலைகள் தீப்பிடித்து எரிந்தது

பந்தர் துறை முகத்தில் மீன்பிடி வலைகள் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2022-11-14 16:48 GMT

மங்களூரு:-

தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூருவை அடுத்த பாண்டேஸ்வர் பகுதியில் பந்தர் மீன்பிடி துறைமுகம் உள்ளது. இங்கிருந்து தினமும் ஏராளமான மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடித்து வருகிறார்கள். மீனவர்கள் தங்களின் வலைகளை பந்தர் துறைமுகத்தில் உள்ள குடோனில் வைத்து வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு திடீரென்று குடோனில் இருந்த மீன்பிடி வலைகள் தீப்பிடித்து எரிந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அங்கிருந்தவர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்க முயன்றனர். ஆனால் அவர்களால் தீயை அணைக்க முடியவில்லை. இதையடுத்து தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்பு படையினர் 2 வாகனங்களில் விரைந்து வந்து, தண்ணீரை பீய்ச்சி அடித்து போராடி தீயை அணைத்தனர். ஆனாலும் அதற்குள் ரூ.2 லட்சம் மதிப்பிலான வலைகள் தீயில் எரிந்து நாசமானது.

இதுகுறித்து பாண்டேஸ்வர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை. யாரோ பீடியை புகைத்து விட்டு போட்டதால் தீ பிடித்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். இதுகுறித்து பாண்டேஸ்வர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்