பெங்களூரு அருகே குடும்ப பிரச்சினையில் பெண் கொலை
பெங்களூரு அருகே குடும்ப பிரச்சினையில் பெண் கொலை செய்த அவரது கணவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
பெங்களூரு:
பெங்களூரு புறநகர் மாவட்டம் ஹெப்பகோடி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட வினாயகா நகரில் வசித்து வருபவர் அரவிந்த். இவரது மனைவி ஸ்ருதி என்ற பவித்ரா (வயது 24). இவரது சொந்த ஊர் விஜயாப்புரா மாவட்டம் ஆகும். அரவிந்தும், ஸ்ருதியும் காதலித்து திருமணம் செய்தனர். வினாயகாநகரில் உள்ள அடுக்குமாடி வீட்டில் 3-வது மாடியில் தம்பதி வசித்து வந்தனர். தனியார் தொழிற்சாலை ஒன்றில் ஸ்ருதி வேலை பார்த்து வந்தார்.
குடும்ப பிரச்சினை காரணமாக தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில், நேற்று முன்தினம் மாலையில் ஸ்ருதியின் வீட்டில் இருந்து கடும் துர்நாற்றம் வந்தது. அவரது வீடும் பூட்டி கிடந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் ஹெப்பகோடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து வீட்டுக்கதவை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது ஸ்ருதி அழுகிய நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரது உடல் துணியால் சுத்தப்பட்டு இருந்தது. அதேநேரத்தில் ஸ்ருதியின் கணவர் தலைமறைவாகி விட்டார். அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. இதனால் குடும்ப பிரச்சினையில் ஸ்ருதியை, அவரது கணவர் அரவிந்த் கொலை செய்துவிட்டு தலைமறைவாகி இருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர்.