தலைவர் பதவி கிடைக்காததால் கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் விஷம் குடித்த பெண் உறுப்பினர்

பத்ராவதி அருகே தலைவர் பதவி கிடைக்காததால் கிராம பஞ்சாயத்து அலுவலகத்திலேயே விஷம் குடித்து பெண் உறுப்பினர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2022-06-17 15:14 GMT

சிவமொக்கா;

கிராம பஞ்சாயத்து உறுப்பினர்

சிவமொக்கா மாவட்டம் பத்ராவதி தாலுகா தொணபகட்டா கிராமத்தை சேர்ந்தவர் கவுஷர் பானு. இவர், தொணபகட்டா கிராம பஞ்சாயத்து உறுப்பினர் ஆவார். கடந்த 2021-ம் ஆண்டு நடந்து முடிந்த கிராம பஞ்சாயத்து தலைவர் தேர்தலில் கவுஷர் பானுவுக்கும், முகமது கலீம் என்பவருக்கும் கடும் போட்டி நிலவியது.

இதைதொடர்ந்து இருதரப்பினர் ஒப்பந்தப்படி முதல் 14 மாதங்கள் கிராம பஞ்சாயத்து தலைவராக முகமது கலீலும், அடுத்த 14 மாதங்கள் கவுஷர் பானுவும் இருக்க தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இதற்கு அனைவரும் சம்மதம் தெரிவித்தனர். அதன்படி அப்போது முதலில் முகமது கலீல் கிராம பஞ்சாயத்து தலைவராக தேர்வு செய்யப்பட்டு பணியாற்றி வந்தார்.

தலைவர் பதவி கிடைக்காததால்...

இந்த நிலையில் ஒப்பந்தப்படி கடந்த சில நாட்களுக்கு முன்பு முகமது கலீலின் பதவிக்காலம் முடிவடைந்தது. இதையடுத்து புதிய தலைவராக கவுஷர் பானுவை தேர்ந்தெடுக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி நேற்றுமுன்தினம் தொணபகட்டா கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் புதிய தலைவரை தேர்ந்தெடுக்க தேர்தல் நடந்தது. பஞ்சாயத்து அதிகாரி ரமேஷ் தேர்தலை நடத்தினார்.

அப்போது அனைத்து உறுப்பினர்களும் தன்னை ஒருமனதாக தேர்வு செய்து தலைவராக்குவார்கள் என்று கவுஷர் பானு எண்ணினார். ஆனால் அதற்கு மாறாக அனைத்து உறுப்பினர்களும் முகமது கலீலுக்கு ஆதரவு தெரிவித்து மீண்டும் அவரை தலைவராக தேர்ந்தெடுத்தனர். இதனால் தொணபகட்டா கிராம பஞ்சாயத்து புதிய தலைவராக முகமது கலீல் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

விஷம் குடித்தார்

இதை சற்றும் எதிர்பாராத கவுஷர் பானு அதிர்ச்சி அடைந்தார். மேலும் கிராம பஞ்சாயத்து அலுவலகத்திலேயே அனைவரது முன்னிலையில் தான் மறைத்து வைத்திருந்த விஷம் மருந்தை எடுத்து குடித்து கவுஷர் பானு தற்கொலைக்கு முயன்றார்.இதனால் சிறிதுநேரத்தில் கவுஷர் பானு மயக்கமடைந்து உயிருக்கு போராடினார். அவரை, பஞ்சாயத்து உறுப்பினர்கள் உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக சிவமொக்கா அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுபற்றி தகவல் அறிந்த பத்ராவதி போலீசார் சம்பவ இடத்திற்கும், ஆஸ்பத்திரிக்கும் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அதில் கிராம பஞ்சாயத்து உறுப்பினரான கவுஷர் பானு தனக்கு ஒப்பந்தப்படி தலைவி பதவி கிடைக்காததால் மனமுடைந்து விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது. இதுகுறித்து பத்ராவதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்