தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க எதிர்ப்பு கழுதைகளுடன் விவசாயிகள் அரை நிர்வாண போராட்டம்
தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மண்டியாவில் கழுதைகளுடன் விவசாயிகள் அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மண்டியா:-
அரை நிர்வாண போராட்டம்
காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவுப்படி தமிழகத்திற்கு கர்நாடக அணைகளில் இருந்து நேற்று வினாடிக்கு 3834 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.
இது கர்நாடக விவசாயிகள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து மண்டியா, மைசூரு விவசாயிகள் தங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளனர். அதன்படி நேற்று மண்டியாவில் பல்வேறு இடங்களில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மண்டியா டவுன்
ஜெயசாமராஜேந்திர உடையார் சாலையில் குவிந்த விவசாயிகள் சிலர் அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள் 2 கழுதைகளை வைத்து, அதற்கு மத்திய, மாநில அரசு என்று பெயர் சூட்டி தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.
எச்சரிக்கை
அப்போது அவர்கள் கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு ரகசியமாக நீர் திறந்துவிட்டுள்ளனர். ஆனால் மாநில அரசு விவசாயிகளிடம் நீர் திறந்துவிடமாட்டோம் என்று கூறியது. ஏன் இந்த நாடகம். மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளுக்கு தொடர்ந்து துரோகம் செய்து வருகிறது.
மாநில முதல்-மந்திரி சித்தராமையா, துணை முதல்-மந்திரி டி.கே.சிவகுமார், மாவட்ட பொறுப்பு மந்திரி செலுவராயசாமி ஆகியோர் விவசாயிகளை ஏமாற்றவிட்டனர். உடனே அவர்கள் பதவி விலக வேண்டும் என்று கோஷமிட்டனர். மேலும் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடுவதை நிறுத்தவில்லை என்றால் தொடர்ந்து போராட்டம் நடத்தப்படும் என்று எச்சரிக்கை விடுத்தனர்.
சாலை மறியல்
அதேபோல சர் எம்.விசுவேஸ்வரய்யா சர்க்கிள் பகுதியில் கூடிய விவசாயிகள், பெங்களூரு-மைசூரு சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் தமிழகத்திற்கு நீா் திறந்துவிடமாட்டோம் என்று கூறி, கர்நாடக அரசு ரகசியமாக கே.எஸ்.ஆர். அணையில் இருந்து நீரை திறந்துவிட்டுள்ளது.
இது விவசாயிகளுக்கு செய்த துரோகம். இதனை கண்டித்து போராட்டம் நடத்தி வருகிறோம். இந்த நீர் பங்கிடு விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் இணைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும். இல்லையென்றால் எங்கள் போராட்டம் தொடரும் என்று கூறினர். இதேபோல மேலும் சில இடங்களில் கைகள், நெற்றியில் கருப்பு பட்டை அணிந்து விவசாயிகள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தால் மண்டியாவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதேபோல ைமசூருவிலும் கபினி அணையில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.