கொரோனா ஊரடங்கில் பண்ணையில் வேலை செய்த ஊழியர்களை விமானத்தில் வீட்டிற்கு அனுப்பிய தொழிலதிபர் பிணமாக மீட்பு

கொரோனா ஊரடங்கின்போது தனது விவசாய பண்ணையில் வேலை செய்த ஊழியர்களை தொழிலதிபர் விமானத்தில் வீட்டிற்கு அனுப்பி வைத்தார்.

Update: 2022-08-24 09:43 GMT

புதுடெல்லி,

கொரோனா வைரஸ் பரவத்தொடங்கிய காலத்தில் இந்தியாவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக லட்சக்கணக்கான புலம்பெயர்ந்த மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு நடந்து செல்லும் சூழ்நிலையி ஏற்பட்டது.

இதனிடையே, டெல்லியை சேர்ந்த தொழிலதிபர் பப்பன் சிங் கோலட் (வயது 55). இவர் தனது பண்ணையில் காளான் பயிரிட்டு விவசாயம் செய்து வருகிறார். இவரது காளான் பண்ணையில் பீகாரை சேர்ந்த 10 ஊழியர்கள் வேலை செய்து வந்தனர்.

கொரோனா ஊரடங்கின் போது தனது பண்ணையில் வேலை செய்து வந்த 10 ஊழியர்களையும் பப்பன் சிங் கோலட் விமானத்தில் சொந்த ஊரான பீகாருக்கு அனுப்பி வைத்தார். தனது பண்ணையில் வேலை பார்த்த ஊழியர்களை விமானத்தில் அனுப்பி வைத்த கோலட்டின் செயல் பலரால் பாராட்டப்பட்டது. அவரது பெயர் நாடு முழுவதும் பிரபலமடைந்தது.

இந்நிலையில், தொழிலதிபர் பப்பன் சிங் கோலட் இன்று தூக்கிட்ட நிலையில் பிணமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியின் அலிபுரா பகுதியில் உள்ள தனது வீட்டிற்கு எதிரே உள்ள கோவிலில் உள்ள மின்விசிறியில் கோலட் தூக்கில் தொங்கிய நிலையில் கோலட் பிணமாக கிடந்துள்ளார்.

இது குறித்து தகவலறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கோலட்டின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

உடல்நலக்குறைவு காரணமாக தற்கொலை செய்துகொள்வதாக கோலட் எழுதி வைத்துள்ள கடிதம் ஒன்றையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்