இங்கிலாந்தில் வேலை வாங்கி தருவதாக பெண்ணிடம் ரூ.35 லட்சம் பறிப்பு

இங்கிலாந்தில் வேலை வாங்கி தருவதாக பெண்ணிடம் ரூ.35 லட்சம் மோசடி செய்த நைஜீரிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-02-28 05:15 GMT

பெங்களூரு-

ரூ.35 லட்சம் மோசடி

பெங்களூரு தொட்டகுப்பி பகுதியில் இளம்பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் வெளிநாட்டில் உள்ள வேலைகளுக்கு முயற்சிகள் மேற்கொண்டு வந்தார். அப்போது அவருக்கு நொகோச்சா காஸ்மிர் என்பவர் செல்போன் மூலம் அறிமுகம் ஆனார். அவர் இங்கிலாந்தில் உள்ள பிரபல நிறுவனத்தில் நர்சு உள்ளிட்ட பணி இடங்களுக்கு ஆட்கள் தேவைப்படுவதாக கூறினார்.

மேலும், அதற்கு தகுதி கட்டணம் உள்பட பல்வேறு கட்டணங்களாக ரூ.35 லட்சம் செலவாகும் என கூறினார். அதை நம்பிய இளம்பெண்ணும் அந்த நபர் கூறிய வங்கி கணக்கிற்கு பல்வேறு தவணைகளாக ரூ.35 லட்சத்தை செலுத்தி உள்ளார். பல நாட்கள் ஆகியும் அவருக்கு வேலை தொடர்பாக எந்த தகவலும் வரவில்லை என கூறப்படுகிறது.

கைது

இதையடுத்து அவர் நொகோக்சா காஸ்மிரை செல்போனில் தொடர்பு கொள்ள முயன்றார். ஆனால் அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. அப்போது தான் மர்மநபர், வேலை வாங்கி தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்டதை அவர் அறிந்தார்.

இதையடுத்து அவர் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையின்பேரில் பணமோசடியில் ஈடுபட்ட நொகோச்சா காஸ்மிரை போலீசார் கைது செய்தனர்.

தமிழ்நாட்டிலும் கைவரிசை

அவர் நைஜீரியாவை சேர்ந்தவர் என்பதும், அவர் இதேபோல் தமிழ்நாடு, ஐதராபாத்தை சேர்ந்த பல்வேறு பெண்களிடம் பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டதும் தெரிந்தது.  அவரிடம் இருந்து லேப்-டாப், சிம் கார்டுகள், பாஸ்போர்ட் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். கைதான நொகோச்சா   காஸ்மிரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Tags:    

மேலும் செய்திகள்