நடப்பு ஆண்டில் மொபைல் சாதனங்களின் ஏற்றுமதி ரூ.82,640 கோடியாக இருக்கும்: மத்திய மந்திரி வைஷ்ணவ்
நடப்பு 2022-23 நிதியாண்டில் மொபைல் சாதனங்களின் ஏற்றுமதி ரூ.82,640 கோடியாக இருக்கும் என மத்திய மந்திரி வைஷ்ணவ் கூறியுள்ளார்.
புதுடெல்லி,
டெல்லியில் மத்திய தொலைதொடர்பு துறை மந்திரி அஷ்வினி வைஷ்ணவ் செய்தியாளர்கள் சந்திப்பில் இன்று பேசும்போது, ஆத்மநிர்பார் திட்டம் பற்றி குறிப்பிட்டார்.
இத்திட்டத்தின் ஒரு பகுதியாக, இந்திய உற்பத்தியாளர்கள் பல்வேறு பிரிவுகளிலும் சர்வதேச அளவில் போட்டியிடவும், முதலீடுகளை கவரவும், ஏற்றுமதியை மேம்படுத்தவும், உலகளாவிய வினியோக சங்கிலியில் இந்தியாவை ஒருங்கிணைக்கவும் மற்றும் இறக்குமதிகளை சார்ந்திருப்பது குறைக்கப்படுவது உள்ளிட்ட விசயங்களுக்காகவும், மத்திய அரசு உற்பத்தி தொடர்பான பி.எல்.ஐ. திட்டங்களை தொடங்கி உள்ளது.
10 ஆண்டுகளுக்கு முன் மொபைல் போன் தயாரிப்புக்கு தேவையான பெரும்பாலான பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டன. ஆனால், தற்போது 99 சதவீத பொருட்கள் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படுகின்றன.
இது மிக பெரிய மாற்றம். நடப்பு 2022-23 நிதியாண்டில் மொபைல் சாதனங்களின் ஏற்றுமதியானது ரூ.82,640 கோடியை கடந்து இருக்கும் என மத்திய மந்திரி வைஷ்ணவ் கூறியுள்ளார்.
இந்தியாவில் முதலீட்டுக்கு ஏற்ற, வேலைவாய்ப்பை உருவாக்கும் ஒன்றாக, தொலைதொடர்பு துறை உருவாகி வருகிறது. கடந்த 7 ஆண்டுகளில் மொபைல் சாதன தயாரிப்பாளர்கள் மற்றும் அவர்களின் வினியோகஸ்தர்களால் நேரடியாகவும் மற்றும் மறைமுகம் ஆகவும் உருவாக்கிய ஒட்டுமொத்த வேலைவாய்ப்புகளின் எண்ணிக்கை 20 லட்சம் ஆகும் என இந்திய செல்லுலார் மற்றும் மின்னணு கூட்டமைப்பு தெரிவிக்கின்றது.
இந்தியாவில் அனைத்து மொபைல் சாதன உற்பத்திக்கான பொருட்களும் உள்ளன. வருகிற ஆண்டுகளில், மின்னணு உற்பத்தி, தொலைதொடர்பு துறைக்கான உற்பத்தி பன்மடங்கு வளர்ச்சி அடையும் என்றும் மத்திய மந்திரி வைஷ்ணவ் கூறியுள்ளார்.