மஹுவா மொய்த்ரா எம்பி பதவியை பறிக்க நாடாளுமன்ற குழு அதிரடி பரிந்துரை?

தொழிலதிபர் ஹிராநந்தானியிடம் மஹுவா மொய்த்ரா லஞ்சம் பெற்றார் என பாஜகவின் சர்ச்சைக்குரிய எம்.பி. நிஷிகாந்த் துபே குற்றம்சாட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Update: 2023-11-08 23:00 GMT

புதுடெல்லி,

மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் மஹுவா மொய்த்ரா. மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜியின் நம்பிக்கைக்குரிய தலைவர்களில் ஒருவர் மஹுவா மொய்த்ரா. மேற்கு வங்க மாநிலம் கிருஷ்ணா நகர் லோக்சபா தொகுதியில் போட்டியிட்டு எம்.பி.யானார்.

நாடாளுமன்றத்தில் பாஜகவுக்கு எதிராக மஹுவா மொய்த்ரா பேசும் அனல் பேச்சுகள் ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளாலும் வரவேற்கப்பட்டு கொண்டாடப்படும்.அதே நேரத்தில் மஹுவா மொய்த்ராவை பரம எதிரியாக பாஜக எம்.பி.க்கள் எதிர்கொள்வர்.

இந்த பின்னணியில் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி, அதானி குறித்து கேள்வி எழுப்புவதற்காக தொழிலதிபர் ஹிராநந்தானியிடம் மஹிவா மொய்த்ரா லஞ்சம் பெற்றார் என பாஜகவின் சர்ச்சைக்குரிய எம்.பி. நிஷிகாந்த் துபே குற்றம்சாட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இந்த நிஷிகாந்த் எம்.பி.தான் பகுஜன் சமாஜ் கட்சி முஸ்லிம் எம்.பி.யை தீவிரவாதி என லோக்சபாவில் பகிரங்கமாக விமர்சித்தவர். நிஷிகாந்த் துபேவின் குற்றச்சாட்டுகளை மஹுவா மொய்த்ரா, ஹிராநந்தானி திட்டவட்டமாக மறுத்திருந்தனர்.

இந்த குற்றச்சாட்டு தொடர்பாக நாடாளுமன்ற நெறிமுறைகள் குழு விசாரணை நடத்தியது. இந்த நெறிமுறைகள் குழுவில் மஹுவா மொய்த்ரா ஆஜரானதிலும் சர்ச்சைகள் வெடித்தன. தற்போது இந்த குழு 500 பக்க அறிக்கையை தயார் செய்திருக்கிறதாம்.இதில், மஹுவா மொய்த்ராவின் லோக்சபா எம்.பி. பதவியை பறிக்க வேண்டும் எனவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன் இந்த விவகாரத்தில் மஹுவா மொய்த்ரா, ஹரிநந்தானி இடையேயான பணப் பரிமாற்றம் குறித்து விசாரணை நடத்தவும் மத்திய அரசுக்கு இந்த குழு பரிந்துரைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனடிப்படையில் சிபிஐ, அமலாக்கப் பிரிவினர் அடுத்ததாக மஹுவா மொய்த்ராவிடம் விசாரணை நடத்தக் கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tags:    

மேலும் செய்திகள்