ராகுல் காந்தி பாதயாத்திரைக்கு மத்திய அரசின் கடிதம் குறித்து காங்கிரஸ் தாக்கு
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் பாதயாத்திரை நாளை (சனிக்கிழமை) டெல்லிக்குள் நுழைகிறது.
புதுடெல்லி,
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் பாதயாத்திரை நாளை (சனிக்கிழமை) டெல்லிக்குள் நுழைகிறது. ஆனால் நாட்டில் ஒமைக்ரானின் துணை மாறுபாடு வைரஸ் பரவல் கண்டறியப்பட்டு உள்ளதால் இந்த பாதயாத்திரையில் கொரோனா விதிமுறைகளை பின்பற்றுமாறும், அது முடியாவிட்டால் யாத்திரயை ரத்து செய்யுமாறும் ராகுல் காந்திக்கு மத்திய சுகாதார மந்திரி கடிதம் எழுதியுள்ளார்.
இந்த நடவடிக்கைக்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்து உள்ளது. இது குறித்து கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது டுவிட்டர் தளத்தில், 'ஒமைக்ரானின் புதிய மாறுபாடு குஜராத் மற்றும் ஒடிசாவில் கடந்த ஜூலை, செப்டம்பர் மற்றும் நவம்பரிலேயே 4 பேரிடம் கண்டறியப்பட்டது' என தெரிவித்து உள்ளார்.
மேலும் அவர், 'ஆனால் ராகுல் காந்திக்கு சுகாதார மந்திரி நேற்று (நேற்று முன்தினம்) கடிதம் எழுதியிருக்கிறார். பிரதமர் மோடி இன்று (நேற்று) கொரோனா குறித்த ஆய்வு நடத்தினார். ராகுல் காந்தியின் பாதயாத்திரை நாளை மறுதினம் (நாளை) டெல்லிக்குள் நுழைகிறது. இப்போது இந்த கால வரிசையை புரிந்து கொள்ளுங்கள்' என குறிப்பிட்டு உள்ளார்.
பாதயாத்திரைக்கு கிடைக்கும் புகழை கெடுக்கவே மத்திய அரசு இந்த நடவடிக்கையை மேற்கொள்வதாக குற்றம் சாட்டியுள்ள ஜெய்ராம் ரமேஷ், அறிவியல் மற்றும் மருத்துவ சான்றுகள் அடிப்படையிலான வழிமுறைகளுக்கு பாதயாத்திரை கட்டுப்படும் என்றும் கூறியுள்ளார்