பேத்திக்கு பாலியல் தொல்லை; முன்னாள் மந்திரி மீது போக்சோ வழக்கு பதிவு - துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்ட விபரீதம்!

பாலியல் குற்றச்சாட்டு குறித்து ராஜேந்திர பஹுகுணா மிகுந்த மன அழுத்தத்திலும், கவலையிலும் இருந்துள்ளார்.

Update: 2022-05-28 05:22 GMT

டேராடூன்,

உத்தராகண்ட் மாநில முன்னாள் மந்திரி ராஜேந்திர பஹுகுணா துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பஹுகுணா தன்னுடைய பேத்திக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக அவருடைய மருமகள் சமீபத்தில் புகார் அளித்தார். இதையடுத்து, ராஜேந்திர பஹுகுணா மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்நிலையில், பாலியல் குற்றச்சாட்டு குறித்து 59 வயதான ராஜேந்திர பஹுகுணா மிகுந்த மன அழுத்தத்திலும், கவலையிலும் இருந்துள்ளார்.இந்நிலையில், கடந்த புதன்கிழமையன்று அவர் தண்ணீர் தொட்டியின் மீது ஏறி தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் மீது பாலியல் வன்கொடுமை வழக்குப் பதிவு செய்த மூன்று நாட்களுக்குப் பிறகு இந்த கொடூர முடிவை அவர் எடுத்துள்ளார்.

மேலும், தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பு, அவர் பலமுறை காவல் துறையின் அவசர எண்ணான 112இல் அழைத்து தற்கொலை செய்து கொள்ளும் தனது திட்டம் குறித்து தெரிவித்தாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, போலீசார் பஹுகுணாவின் வீட்டிற்கு விரைந்தனர். ஆனால் அப்போது அவர்களை பார்த்ததும், அவர் தண்ணீர் தொட்டியின் மீது ஏறி, பின் தன்னைத்தானே சுட்டுக்கொள்ளப் போவதாகத் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை செய்து போலீசார் அவரை தற்கொலை செய்து கொள்ளவிடாமல் தடுக்க முயன்றனர். ஆனால் தன் மீது பொய் வழக்கு போடப்பட்டதாக திரும்ப திரும்பக் கூறிய ராஜேந்திர பஹுகுணா, திடீரென துப்பாக்கியை எடுத்து மார்பில் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.


இதற்கிடையில், அவரது மகன் அஜய் தனது தந்தையின் தற்கொலைக்கு தூண்டியதாக அவரது மனைவி, மாமனார் மற்றும் அவர்களது பக்கத்து வீட்டுக்காரர் மீது புகார் அளித்தார். முன்னாள் மந்திரி தற்கொலை செய்துகொண்ட விவகாரம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராஜேந்திர பஹுகுணா, உத்தராகண்டில் 2004-05ஆம் ஆண்டில் என்.டி.திவாரி அரசில் இணை மந்திரியாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்