முன்னாள் துணை முதல்-மந்திரி ஈசுவரப்பாவுக்கு கொலை மிரட்டல் போலீஸ் சூப்பிரண்டிடம் நேரில் புகார்
கஜகஸ்தான் நாட்டில் இருந்து முன்னாள் துணை முதல்-மந்திரி ஈசுவரப்பாவுக்கு கொலை மிரட்டல் வந்துள்ளது. இதுகுறித்து அவர் நேரில் சென்று போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் கொடுத்தார்.
சிவமொக்கா-
கஜகஸ்தான் நாட்டில் இருந்து முன்னாள் துணை முதல்-மந்திரி ஈசுவரப்பாவுக்கு கொலை மிரட்டல் வந்துள்ளது. இதுகுறித்து அவர் நேரில் சென்று போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் கொடுத்தார்.
ஈசுவரப்பாவுக்கு கொலை மிரட்டல்
பா.ஜனதா மூத்த தலைவராக இருப்பவர் ஈசுவரப்பா. முன்னாள் துணை முதல்-மந்திரியான அவர், தேர்தல் அரசியலில் இருந்து ஒதுங்கி உள்ளார். நடந்து முடிந்த கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவுக்கு ஆதரவாக தீவிர பிரசாரம் மேற்கொண்டார். ஆனாலும் பா.ஜனதா கட்சி 66 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று ஆட்சியை இழந்துள்ளது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு 12.30 மணி அளவில் ஈசுவரப்பாவின் செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. எதிர்முனையில் பேசிய நபர், ஈசுவரப்பாவுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். அந்த அழைப்பு கஜகஸ்தான் நாட்டில் இருந்து வந்தது தெரியவந்துள்ளது.
போலீஸ் சூப்பிரண்டிடம் புகார்
இதனால் அதிர்ச்சி அடைந்த ஈசுவரப்பா, நேற்று காலை சிவமொக்கா போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு வந்து போலீஸ் சூப்பிரண்டு மிதுன்குமாரை சந்தித்து பேசினார். பின்னர் தனக்கு கஜகஸ்தான் நாட்டில் இருந்து செல்போன் மூலம் கொலை மிரட்டல் வந்துள்ளதாகவும், இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறி புகார் கடிதம் கொடுத்தார். இந்த புகார் மனுவை வாங்கி கொண்ட போலீஸ் சூப்பிரண்டு மிதுன்குமார், இதுபற்றி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
இதையடுத்து போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இருந்து வெளியே வந்த ஈசுவரப்பா, நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நள்ளிரவு 12.30 மணி அளவில் எனது செல்போனுக்கு கஜகஸ்தான் நாட்டில் இருந்து பேசிய ஒரு நபர் எனக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் மனு கொடுத்துள்ளேன். கடந்த சில மாதங்களுக்கு முன்பு மத்திய மந்திரி நிதின் கட்காரிக்கும் கொலை மிரட்டல் வந்துள்ளது. இதுதொடர்பாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் ஒருவரை கைது செய்துள்ளனர் என்றார்.