எங்களை மண்ணில் புதைத்தாலும் விதையாக முளைத்து வருவோம்; பிரதமர் மோடி மீது கார்கே காட்டம்
எங்களை மண்ணில் புதைத்தாலும் விதையாக முளைத்து வருவோம் என்று பிரதமர் மோடிக்கு எதிராக அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே காட்டமாக கூறியுள்ளார்.
பெங்களூரு:
பெலகாவியில் நடைபெற்ற காங்கிரஸ் இளைஞர்கள் மாநாட்டில் அக்கட்சியின் அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கலந்துகொண்டு பேசியதாவது:-
புனிதமான தலம்
கர்நாடக தேர்தல் முடிவுகள் ஒட்டுமொத்த தேசத்திற்கும் ஒரு செய்தியை வெளிப்படுத்தும். அதனால் கர்நாடக சட்டசபை தேர்தல் மிக முக்கியமானது. அதனால் நமது கட்சி தலைவர்கள், தொண்டர்கள் அனைவரும் ஒற்றுமையாக பணியாற்ற வேண்டும். இந்த பெலகாவி காங்கிரசுக்கு புனிதமான தலம். இங்கு மகாத்மா காந்தி தலைமையிலை் அகில இந்திய காங்கிரசின் 39-வது மாநாடு நடைபெற்றது.
1924-ம் ஆண்டு காந்தி, காங்கிரசின் கொள்கை, கோட்பாடு, பார்வை என்ன என்பதை கூறினார். ஏழைகளின் குரல் அரசுக்கு கேட்க வேண்டும், பெண்களுக்கு பாதுகாப்பான நாடாக இந்தியா திகழ வேண்டும் என்று தான் விரும்புவதாக காந்தி கூறினார். காந்தியின் இந்த கொள்கை, விருப்பங்களை நேரு அமல்படுத்தினார். இந்த தொகுதியில் 18 தொகுதிகளிலும் காங்கிரஸ் வெல்ல வேண்டும்.
40 சதவீத கமிஷன்
கர்நாடக வரலாற்றில் இத்தகைய மோசமான ஊழல் முன் எப்போதும் நடந்தது இல்லை. 40 சதவீத கமிஷன் கொடுத்தால் தான் ஒப்பந்ததாரர்களுக்கு பட்டுவாடா செய்யப்படுகிறது. இதை ஒப்பந்ததாரர்களே கூறுகிறார்கள். பிரதமர் மோடிக்கே அவர்கள் கடிதம் எழுதினர். ஆனல் அதுபற்றி உள்துறை மந்திரி அமித்ஷா விசாரணை நடத்தாதது ஏன்?.
ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 4 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் பாதயாத்திரை நடத்தினார். அனைத்து தரப்பு மக்களின் பிரச்சினைகளை கேட்டு அறிந்தார். காஷ்மீரில் 46 நாட்களுக்கு முன்பு ராகுல் காந்தி பெண்களின் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுப்பி பேசினார். அதற்கு ஆதாரங்கள் கேட்டு டெல்லி போலீசார் அவரது வீட்டுக்கு சென்றுள்ளனர்.
விசாரணை நடத்தவில்லை
ஆனால் கர்நாடகத்தில் பா.ஜனதா அரசின் ஊழல்களை ஆதாரத்துடன் கூறினாலும் அதுகுறித்து விசாரணை நடத்தவில்லை. ஒரு திட்டத்தின் மதிப்பு ரூ.100 என்றால், அதை ரூ.200 என நிர்ணயித்து மீதம் உள்ளதை கொள்ளையடிக்கிறார்கள். இதில் கர்நாடக பா.ஜனதாவினர், தேசிய அளவில் பா.ஜனதாவினருக்கு தலா 40 சதவீத கமிஷன் பெறுகிறார்கள்.
பிரதமர் மோடி பெலகாவிக்கு வந்து என்னை பற்றி பேசிவிட்டு சென்றுள்ளார். எனது 'ரிமோட் கன்ட்ரோல்' வேறு சிலரிடம் இருப்பதாக கூறியுள்ளார். அப்படி என்றால் பா.ஜனதா தலைவர் ஜே.பி.நட்டா 'ரிமோட் கன்ட்ரோல்' யாரிடம் உள்ளது. அதானி குறித்து ராகுல் காந்தி மக்களவையில் கேள்வி கேட்டால் அதை நீக்குகிறார்கள். நாட்டில் ஜனநாயகம் இல்லை, சாதி வாதம் அதிகரித்துள்ளதாக சொன்னால் அது தவறா?. பா.ஜனதாவினர் பொய் பேசுகிறார்கள்.
ராகுல்காந்தி பயப்பட மாட்டார்
மத்திய அரசின் மிரட்டலுக்கு ராகுல் காந்தி பயப்பட மாட்டார். அவருக்கு எத்தனை நாட்கள் தொந்தரவு கொடுக்கிறார்களோ கொடுக்கட்டும். அதற்கு நாங்கள் எல்லாவற்றுக்கும் தயாராக உள்ளோம். பிரதமர் மோடி அவர்களே, நீங்கள் எங்களை மண்ணில் புதைக்க முயற்சி செய்யுங்கள். நாங்கள் விதையாக முளைத்து மேலே வருவோம். மத்திய அரசின் துறைகளில் 50 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளன. அந்த காலியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கவில்லை. ஆண்டுக்கு 2 கோடி வேலை வாய்ப்பகளை உருவாக்குவதாக பிரதமர் மோடி கூறினார். அந்த வாக்குறுதி என்ன ஆனது?.
கா்நாடக சட்டசபை தேர்தலில் பண பலத்தை கொண்டு வெற்றி பெற பா.ஜனதா முயற்சி செய்கிறது. 40 சதவீத கமிஷன் மூலம் பணத்தை கொள்ளையடித்து வைத்துள்ளனர். முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் அரசு துறைகளில் 1.62 பணியிடங்கள் நிரப்பப்பட்டன. 11 லட்சம் தனியார் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டன.
இவ்வாறு மல்லிகார்ஜூன கார்கே பேசினார்.