இளைஞர்களின் நலனுக்காக தொழில் பூங்கா அமைப்பது உறுதி

கோலார் தங்கவயலில் இளைஞர்களின் நலனுக்காக தொழில் பூங்கா அமைப்பது உறுதி என்று மந்திரி முனிரத்னா பேசியுள்ளார்.

Update: 2022-10-14 18:45 GMT

கோலார் தங்கவயல்:

குடிநீர் வினியோகிக்கும் திட்டம்

கோலார் தங்கவயல் ராபர்ட்சன்பேட்டை பாரண்டஹள்ளியில் ரூ.2 கோடி செலவில் புதிதாக தாலுகா பஞ்சாயத்து அலுவலகம் கட்டப்பட்டது. அதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. விழாவுக்கு தொகுதி எம்.எல்.ஏ. ரூபா கலா சசிதர் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக கோலார் மாவட்ட பொறுப்பு மந்திரி முனிரத்னா கலந்துகொண்டார். மேலும் முனிசாமி எம்.பி, கலெக்டர் வெங்கடராஜா, பஞ்சாயத்து நிர்வாக முதன்மை அதிகாரி யுகேஷ் குமார், தங்கவயல் போலீஸ் சூப்பிரண்டு தரணி தேவி ஆகியோர் கலந்துகொண்டனர். இதையடுத்து தாலுகா பஞ்சாயத்து அலுவலகத்தை குத்துவிளக்கேற்றி மந்திரி முனிரத்னா திறந்து வைத்து பேசியதாவது:-

நாட்டில் கிராம பகுதிகளில் உள்ள மக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை வினியோகிக்க பிரதமர் நரேந்திர மோடி விரும்பினார். அதன் பேரில் நாடு முழுவதும் கிராமங்கள் தோறும் குடியிருப்புகளுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வினியோகிக்கும் திட்டம் தொடங்கப்பட்டு நடைமுறையில் உள்ளது.

தொழில் பூங்கா அமைப்பது உறுதி

அதன்படி கர்நாடக மாநிலத்திலும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வினியோகிப்பதை அரசு குறிக்கோளாக கொண்டுள்ளது. தங்கச்சுரங்கம் மூடிய பின் நாள்தோறும் சுமார் 30 ஆயிரத்திற்கும் அதிகமானோர் வேலை தேடி பெங்களூருவுக்கு தினப்பயணிகளாக செல்வது வேதனை அளிப்பதாக உள்ளது. இவர்களுக்கு கோலார் தங்கவயலில் வேலை வாய்ப்பு கிடைக்கும் வகையில் தொழில் பூங்கா அமைக்க முதல் மந்திரி பசவராஜ் பொம்மையும் சட்டசபையில் உறுதி அளித்துள்ளார்.

கோலார் தங்கவயலில் தொழில் பூங்கா அமைப்பது உறுதி. தொகுதி எம்.எல்.ஏ. ரூபாகலா சசிதர் ஒரு பெண்ணாக இருந்து தொகுதியின் வளர்ச்சிக்காக பெரிதும் பாடுபட்டு வருகிறார். அவரின் முயற்சிக்கு கர்நாடக அரசு பெரிதும் துணையாக நிற்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

2,983 ஏக்கர் நிலம்

இதையடுத்து தொகுதி எம்.எம்.எல். ரூபா கலா சசிதர் தலைமை தாங்கி பேசுகையில், கோலார் தங்கவயல் தொகுதி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை அதிகரிக்க தங்கச் சுரங்கத்திற்கு சொந்தமான 2 ஆயிரம் ஏக்கர் நிலம் மற்றும் பி.இ.எம்.எல். நிறுவனத்திற்கு சொந்தமான 983 ஏக்கர் நிலத்தில் தொழில் பூங்கா அமைக்க கர்நாடக அரசு அந்த நிலத்தை தொழில் வளர்ச்சி வாரியத்திற்கு மாற்ற வேண்டும். அப்போது தான் எனது தொகுதியை சேர்ந்த மக்கள் நாள்தோறும் பெங்களூருவுக்கு வேலை தேடி செல்லவேண்டிய அவல நிலை ஏற்படாது.

எனவே கர்நாடக அரசு உடனே 2,983 ஏக்கர் நிலத்தில் தொழில் பூங்கா அமைக்க தேவையான நடவடிக்கை எடுக்கவேண்டும். அத்துடன் கோலார் தங்கவயல் தனி தாலுகாவாக உருவாகியிருப்பதால் பங்காருபேட்டையில் இருப்பதை போல் கோலார் தங்கவயல் தாலுகாவில் தோட்டக்கலைத்துறை அலுவலகத்தை நிறுவவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்