மறுவாழ்வு மையத்தில் என்ஜினீயரை 3 மாதம் சிறை வைத்து தாக்குதல்
மறுவாழ்வு மையத்தில் என்ஜினீயரை 3 மாதம் சிறை வைத்து தாக்குதல் நடந்துள்ளது.
பெங்களூரு: பெங்களூருவில், என்ஜினீயரை 3 மாதம் மறுவாழ்வு மையத்தில் சிறை வைத்து தாக்கிய சம்பவம் நடந்து உள்ளது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மறுவாழ்வு மையம்
பெங்களூரு கொத்தனூர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட கனகஸ்ரீ லே-அவுட்டில் வசித்து வருபவர் ஜோசப். என்ஜினீயரான இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் ஜோசப்பின் மனைவிக்கு கடந்த 7 மாதங்களுக்கு முன்பு குழந்தை பிறந்து இருந்தது. அந்த குழந்தைக்கு பால் ஊட்டும் விஷயத்தில் ஜோசப்பிற்கும், அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்த நிலையில் கடந்த ஜூலை மாதம் 17-ந் தேதி இரவும் குழந்தைக்கு பால் ஊட்டும் விஷயம் தொடர்பாக ஜோசப், அவரது மனைவி இடையே பிரச்சினை உண்டானது. அப்போது ஜோசப் குடிபோதையில் இருந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் குடிப்பழக்கத்தில் இருந்து மீண்டு வர சிகிச்சை அளிக்கும் மறுவாழ்வு மையத்திற்கு தொடர்பு கொண்டு பேசிய ஜோசப்பின் மனைவி, எனது கணவர் குடிபோதையில் தகராறு செய்வதாகவும் அவரை மறுவாழ்வு மையத்திற்கு அழைத்து செல்லும்படியும் கூறினார்.
சிறை வைத்து தாக்குதல்
இதையடுத்து ஜோசப்பின் வீட்டிற்கு வந்த மறுவாழ்வு மையத்தினர் ஜோசப்பை அழைத்து சென்றனர். பின்னர் அவரை வேறு ஒரு மையத்திற்கு மாற்றியதாக தெரிகிறது. இந்த நிலையில் மறுவாழ்வு மையத்தினரிடம் நான் தினமும் குடித்துவிட்டு வந்து தகராறு செய்ய மாட்டேன் என்றும், என் மீது மனைவி பொய்யான புகார் அளித்து இருப்பதாகவும் கூறினார். ஆனால் இதனை ஏற்க மறுத்த மறுவாழ்வு மைய அதிகாரிகள், ஜோசப்பை அடித்து, உதைத்து அவரது காலில் காயம் ஏற்படுத்தியதாக தெரிகிறது.
இந்த நிலையில் கடந்த சில 4 நாட்களுக்கு முன்பு ஜோசப்பை அவரது தாய் மறுவாழ்வு மையத்திற்கு சென்று மீட்டு வந்தார். அவர் தற்போது சிகிச்சைக்காக பவுரிங் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இந்த நிலையில் தன்னை கடத்தி சென்று மறுவாழ்வு மையத்தில் சிறை வைத்து தாக்கியதாக கொத்தனூர் போலீஸ் நிலையத்தில் ஜோசப் புகார் அளித்தார். அந்த புகாரின்பேரில் மறுவாழ்வு மைய அதிகாரிகள் சிலா் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.