அமலாக்கத்துறை இயக்குநரின் பதவிக்காலம் செப்.15 வரை நீட்டிப்பு: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
அமலாக்கத்துறை இயக்குர் எஸ்.கே.மிஸ்ராவின் பதவிக்காலத்தை செப்டம்பர் 15 வரை நீட்டித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
புதுடெல்லி,
அமலாக்கத்துறை இயக்குநராக உள்ள எஸ்.கே.மிஸ்ராவின் பதவிக்காலம் வரும் 31-ந்தேதியுடன் முடிவடைகிறது. இதனிடையே, எஸ்.கே.மிஸ்ராவின் பதவிக்காலத்தை அக்டோபர் 15ந்தேதி வரை நீட்டிக்கக்கோரி மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தது.
இந்த மனு மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் இன்று நடைபெற்றது. அப்போது பேசிய நீதிபதி, எதற்காக ஒரு நபருக்காக மீண்டும் மீண்டும் பதவிநீட்டிப்பு தொடர்பாக வருகிறீர்கள், அமலாக்கத்துறையில் வேறு அதிகாரிகள் இல்லையா, இது மற்ற அதிகாரிகள் யாரும் திறமையானவர்கள் இல்லை என்ற உருவகத்தை கொடுக்கும் வகையில் உள்ளது போன்ற கேள்விகளை முன்வைத்தார்.
அப்போது மத்திய அரசு சார்பில் கூறும்போது, வரும் செப்டம்பர் மாதம் சர்வதேச அளவில் சட்டவிரோத பணப்பரிமாற்றத்தை தடுக்கக்கூடிய, அதேவேளையில் பயங்கரவாதிகளுக்கு பணம் செல்வதை கண்காணிக்கக்கூடிய அமைப்பானது இந்தியாவிற்கு வருகிறது.
இந்த கூட்டம் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். அப்போது அமலாக்கத்துறை சார்பில் என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது உள்ளிட்ட கருத்து பரிமாற்றங்கள் முக்கியமானது. அதன் காரணமாகவே இவருக்கான பதவி நீட்டிப்பை கேட்கிறோம் என தெரிவிக்கப்பட்டது.
தேசத்தின் நலன் உள்ளிட்டவற்றை கவனத்தில் கொள்ளவேண்டும் என்று மத்திய அரசு சார்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டது. இதன் பின்னர் அந்த வாதங்களை ஏற்ற சுப்ரீம் கோர்ட்டு, செப்டம்பர் 15-ந்தேதி வரை எஸ்.கே.மிஸ்ரா அமலாக்கத்துறை இயக்குநராக நீடிக்கலாம் என தீர்ப்பு வழங்கியது.
அதுமட்டுமல்லாமல், செப்டம்பர் 15-ந்தேதிக்கு பிறகு எந்தவொரு காரணத்திற்காகவும் பதவிக்காலம் நீட்டிக்கப்படாது என்றும், இது தொடர்பாக யாரேனும் வழக்குகள் தொடுத்தாலும், அதனை விசாரணைக்கு ஏற்கமாட்டோம் எனவும் சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது.
எஸ்.கே.மிஸ்ராவின் பதவிக்காலம் நீட்டிப்பு சட்ட விரோதம் என அறிவித்திருந்த சுப்ரீம் கோர்ட்டு, தற்போது, அவருக்கு பதவிக்காலம் நீட்டிப்பு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.