நிலமோசடி வழக்கு: பலமணி நேர விசாரணைக்கு பின் சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத் கைது

நிலமோசடி வழக்கில் சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத்தை அமலாக்கத்துறையினர் நள்ளிரவு கைது செய்தனர்.

Update: 2022-08-01 02:24 GMT

Image Courtesy: PTI

மும்பை,

சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத். எம்.பி.யான சஞ்சய் ராவத் சிவசேனாவின் உத்தவ் தாக்கரே ஆதரவாளராவார். இதனிடையே, நில மோசடி தொடர்பாக சட்டவிரோத பணபரிவர்த்தையில் ஈடுபட்டதாக எழுந்த புகாரின் விசாரணை தொடர்பாக சஞ்சய் ராவத் வீட்டில் நேற்று காலை 7 முதல் அமலாக்கத்துறை சோதனை நடத்தினர்.

இந்த சோதனையின் போது சஞ்சய் ராவத் வீட்டில் வைத்து அவரிடம் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தினர். இந்த சோதனையின்போது ராவத் வீட்டில் இருந்து 11 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை தொடர்ந்து மாலை 5 மணியளவில் சஞ்சய் ராவத் அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்து செல்லப்பட்டார்.

அமலாக்கத்துறை அலுவலகத்தில் வைத்தும் சஞ்சய் ராவத்திடம் நிலமோசடி மற்றும் சட்டவிரோத பண பரிவர்த்தனை தொடர்பாக அமலாக்கத்துறையினர் மீண்டும் விசாரணை நடத்தினர். இந்த விசாரணை நள்ளிரவு வரை நீடித்தது.

இந்நிலையில், பல மணி நேர விசாரணைக்கு பின் சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத்தை அமலாக்கத்துறையினர் நள்ளிரவு கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சஞ்சய் ராவத் இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட உள்ளார். அவரை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சஞ்சய் ராவத் கைது செய்யப்பட்ட நிலமோசடி, பண பரிவர்த்தனை தொடர்பான வழக்கின் முழு விவரம்:-

குடிசை சீரமைப்பு திட்டத்தின் கீழ் மும்பை கோரேகாவ் பகுதியில் உள்ள பத்ரா சால் பகுதியை சீரமைக்க மகாடா(மராட்டிய வீட்டு வசதி வாரியம்) முடிவு செய்தது.

ரூ.1,034 கோடி மோசடி

இதையடுத்து கடந்த 2007-ம் ஆண்டு மகாடா, பத்ரா சாலை சீரமைக்க குரு ஆஷிஷ் என்ற கட்டுமான நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்தது. இந்த ஒப்பந்தத்தின்படி குரு ஆஷிஷ் நிறுவனம் குடிசைப்பகுதியில் வசித்த 672 குடும்பங்களுக்கு வீடு கட்டி தரவேண்டும். மீதமுள்ள இடத்தில் வீடுகளை கட்டி விற்பனை செய்யலாம்.

ஆனால், குரு ஆஷிஷ் நிறுவனம் குடிசைப்பகுதி மக்களுக்கு வீடு கட்டி கொடுக்கவில்லை. மேலும் வீடுகட்ட ஒதுக்கப்பட்ட நிலத்தையும் அந்த நிறுவனம் வேறு கட்டுமான அதிபர்களுக்கு விற்றது. இதேபோல அவர்கள் வீடுகட்டி தருவதாக கூறியும் பலரிடம் ரூ.100 கோடிக்கு மேல் வாங்கி மோசடியில் ஈடுபட்டனர். மேலும் இந்த திட்டத்துக்காக வங்கிகளிலும் கடன் வாங்கி மோசடியில் ஈடுபட்டுள்ளனர். ஒட்டு மொத்தமாக பத்ரா சால் வழக்கில் ரூ.1,034 கோடி அளவுக்கு மோசடி நடந்ததாக குற்றம்சாட்டப்பட்டு உள்ளது.

இதில் சட்டவிரோதமாக நடந்த பணபரிவர்த்தனை தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிக்க வைத்த ரூ.83 லட்சம்

இந்த வழக்கின் முக்கிய குற்றவாளி குரு ஆஷிஷ் கட்டுமான நிறுவனத்தின் இயக்குனர்களில் ஒருவரான பிரவின் ராவத் ஆவார். மோசடி நடந்ததாக கூறப்படும் ரூ.1,034 கோடியில் ரூ.100 கோடி பிரவின் ராவத்திற்கு வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. எனவே பிரவின் ராவத்தை பத்ரா சால் மோசடி வழக்கில் கடந்த பிப்ரவரி மாதம் அமலாக்கத்துறை அதிரடியாக கைது செய்தது.

இதற்கிடையே பிரவின் ராவத் மோசடியில் ஈடுபட்ட பணத்தில் ரூ.83 லட்சத்தை அவரது நெருங்கிய நண்பரும், சிவசேனா எம்.பி.யுமான சஞ்சய் ராவத்திற்கு கொடுத்ததாக கூறப்படுகிறது. அதாவது 2010-ம் ஆண்டு பிரவின் ராவத்தின் மனைவி மாதுரி, சஞ்சய் ராவத்தின் மனைவி வர்ஷாவுக்கு ரூ.83 லட்சம் கடனாக கொடுத்ததாக தெரிகிறது. அந்த பணத்தில் வர்ஷா தாதரில் ஒரு வீட்டை வாங்கி உள்ளார்.

இதற்கிடையே மராட்டியத்தில் மகாவிகாஸ் ஆட்சி அமைந்த பிறகு இந்த விவகாரம் தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணையை முடுக்கியது. இந்த வழக்கில் சஞ்சய் ராவத்தின் மனைவி பெயரில் உள்ள ரூ.11.15 கோடி மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியது.

வீட்டில் சோதனை

இந்த வழக்கில் கடந்த மாதம் 1-ந் தேதி சஞ்சய் ராவத் மும்பையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார். அப்போது அவரிடம் 10 மணி நேரம் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது, பணமோசடி தடுப்பு சட்ட குற்றப்பிரிவுகளின் கீழ் அவரின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.

இதற்கிடையே இந்த வழக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு மீண்டும் அவருக்கு 2 முறை சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் அவர் நாடாளுமன்ற கூட்டத்தொடரை காரணம் கூறி விசாரணைக்கு ஆஜராகவில்லை.

இந்தநிலையில் இந்த வழக்கு தொடர்பாக நேற்று சஞ்சய் ராவத் வீடு மற்றும் மும்பையில் அவர் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறையினர், மத்திய ரிசர்வ் போலீசாருடன் இணைந்து சோதனை நடத்தினர். இதில், காலை 7 மணியளவில் மும்பை பாண்டுப்பில் உள்ள சஞ்சய் ராவத்தின் வீட்டுக்கு அமலாக்கத்துறையினர் சென்று அதிரடி சோதனை மேற்கொண்டனர்

சுமார் 10 மணி நேர சோதனைக்கு பிறகு மாலை 5 மணியளவில் அமலாக்கத்துறையினர் விசாரணைக்காக சஞ்சய் ராவத்தை வீட்டில் இருந்து மும்பை பல்லர்டு எஸ்டேட் பகுதியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்து சென்றனர்.

பத்ரா சால் மோசடி வழக்கில் அதிகாரிகள் சஞ்சய் ராவத்திடம் தீவிர விசாரணையை தொடங்கினர். அங்கு பல மணிநேர விசாரணைக்கு பின் நள்ளிரவில் அமலாக்கத்துறையால் சஞ்சய் ராவத் கைது செய்யப்பட்டார்.

சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட சம்பவம் மராட்டிய அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்