224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு மே 10-ந்தேதி தேர்தல்
224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு மே மாதம் 10-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுவதாக நேற்று தேர்தல் கமிஷன் அறிவித்தது.-தேர்தல் கமிஷன் அறிவிப்பு
புதுடெல்லி:-
முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடக்கிற கர்நாடக மாநில சட்டசபையின் பதவிக்காலம் மே மாதம் 24-ந் தேதி முடிகிறது.
சட்டசபை தேர்தல்
அதற்குள் அங்கு புதிய சட்டசபை அங்கு அமைக்கப்பட வேண்டும். சட்டசபை தேர்தல் தேதி எந்த நேரத்திலும் அறிவிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பில் அங்கு ஆளும் பா.ஜ.க.வும், எதிர்க்கட்சியான காங்கிரசும் ஏற்கனவே தேர்தல் பிரசாரத்தை தொடங்கிவிட்டன.
அங்கு ஆட்சியைத் தக்கவைப்பதற்காக பா.ஜ.க.வும், இழந்த ஆட்சியை மீண்டும் கைப்பற்ற காங்கிரஸ் கட்சியும் வரிந்து கட்டுகின்றன. தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்னதாகவே ஜனதாதளம் (எஸ்) கட்சி 93 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்தது. அதுபோல் காங்கிரஸ் கட்சி 124 தொகுதிகளுக்கான தனது முதல் வேட்பாளர் பட்டியலை கடந்த வாரம் வெளியிட்டுள்ளது. பா.ஜனதா கட்சி வேட்பாளர் தேர்வில் மும்முரமாக ஈடுபட்டுள்ளது.
மே 10-ந் தேதி தேர்தல்
இந்த நிலையில் கர்நாடக மாநில சட்டசபை தேர்தல் தேதியை அறிவிப்பதற்காக டெல்லியில் தலைமை தேர்தல் கமிஷனர் ராஜீவ் குமார் நேற்று நிருபர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர், 224 இடங்களைக் கொண்ட கர்நாடக சட்டசபைக்கு ஒரே கட்டமாக மே மாதம் 10-ந் தேதி தேர்தல் நடத்தப்படும் என அறிவித்தார்.
பெரும்பான்மையான வாக்காளர்களை வாக்குப்பதிவு செய்வதற்கு வாக்குச்சாவடிகளுக்கு வரவழைப்பதற்கு ஏதுவாக திங்கட்கிழமையோ, வெள்ளிக்கிழமையோ வாக்குப்பதிவு நடத்தாமல், புதன்கிழமை வாக்குப்பதிவு நடத்தப்படுகிறது என தலைமை தேர்தல் கமிஷனர் ராஜீவ் குமார் தெரிவித்தார்.
13-ந் தேதி மனு தாக்கல்
கர்நாடக சட்டசபை தேர்தலில் வேட்புமனு தாக்கல் வரும் 13-ந் தேதி தொடங்குகிறது. வேட்புமனு தாக்கலுக்கு 20-ந் தேதி கடைசி நாள் ஆகும். வேட்புமனு பரிசீலனை 21-ந் தேதி நடக்கிறது. வேட்புமனுக்களைத் திரும்பப்பெற 24-ந் தேதி கடைசி நாள் ஆகும். வாக்கு எண்ணிக்கை மே 13-ந் தேதி நடக்கிறது. அன்று மாலையே அங்கு ஆட்சி அமைக்கப்போவது யார் என்பது தெரிய வந்து விடும்.
கர்நாடக மாநிலத்தில் தேர்தல் நடத்தை விதிகள் நேற்று உடனடியாக அமலுக்கு வந்து விட்டன. தேர்தல் கமிஷன் அனுமதியின்றி நலத்திட்டங்களை அறிவிக்க முடியாது, உயர் அதிகாரிகளை
இடமாற்றம் செய்யவும் இயலாது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வருவதற்கு முன்பே, தேர்தல் கமிஷனின் வழிகாட்டுதல்கள் மீது அமலாக்க அமைப்புகளால் கடுமையான கண்காணிப்பு உறுதி செய்யப்பட்டது; இதனால் அந்த மாநிலத்தில் இதுவரை ரூ.80 கோடிக்கு மேல் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று தலைமை தேர்தல் கமிஷனர் ராஜீவ் குமார் தெரிவித்தார்.
கடந்த தேர்தல் நிலவரம்
கர்நாடக மாநிலத்தில் 2018-ம் ஆண்டு மே மாதம் நடந்த தேர்தலில், எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காமல், தொங்கு சட்டசபை அமைந்தது. 104 இடங்களுடன் பா.ஜ.க. தனிப்பெரும்பான்மை கட்சியாக வந்தது.
ஆனால் 80 இடங்களில் வென்ற காங்கிரசும், 37 இடங்களில் வெற்றி பெற்ற மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியும் தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி அமைத்து, எச்.டி.குமாரசாமி தலைமையில் அரசு அமைந்தது. இந்த கூட்டணி 2019-ம் ஆண்டு ஜூலை மாதம் முடிவுக்கு வந்தது. அந்த கட்சிகளில் இருந்து எம்.எல்.ஏ.க்கள் 17 பேர் பா.ஜ.க.வுக்கு தாவினர். அதைத் தொடர்ந்து எடியூரப்பா தலைமையில் அங்கு பா.ஜ.க. அரசு அமைந்தது. ஆனால் 2021-ம் ஆண்டு ஜூலை மாதம் எடியூரப்பா முதல்-மந்திரி பதவியை விட்டு விலகினார். அதைத் தொடர்ந்து பசவராஜ் பொம்மை முதல்-மந்திரி ஆனார்.
பா.ஜ.க. ஆட்சியைத் தக்கவைக்குமா?
இந்த சட்டசபை தேர்தல், அவருக்கு அக்னி பரீட்சையாக அமைகிறது. அவர் பிரதமர் மோடியின் தலைமையும், பா.ஜ.க.வின் கொள்கைகளும் சாதகமாக அமையும், ஆட்சியைத் தக்கவைத்து விடலாம் என நம்புகிறார்.
அதே நேரத்தில் தற்போது அதானி விவகாரம், ராகுல் காந்தி பதவி பறிப்பு அனுதாப அலை போன்றவை காங்கிரசுக்கு சாதகமாக அமையும் என்று அந்த கட்சி எதிர்பார்க்கிறது.
முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மதசார்பற்ற ஜனதாதளம் கட்சி, காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. என இரு தேசிய கட்சிகளையும் சம தொலைவில் வைத்துள்ளது. இந்த கட்சி சட்டசபை தேர்தலில் எத்தனை இடங்களைக் கைப்பற்றும், புதிய அரசு அமைய 'கிங் மேக்கராக' மாறுமா என்ற எதிர்பார்ப்பும் இல்லாமல் இல்லை.
இதற்கு மத்தியில் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியும் கர்நாடக சட்டசபை தேர்தல் களத்தில் குதிக்கிறது. 80 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அந்த கட்சி ஏற்கனவே அறிவித்துள்ளது. இந்த கட்சி என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
தற்போதைய பலம்
தற்போதைய சட்டசபையில் கட்சிகள் பலம்
மொத்த இடங்கள் - 224
பா.ஜ.க. - 118
காங்கிரஸ் - 69
மதசார்பற்ற ஜனதா தளம் - 31
சுயேச்சைகள்- 3
காலி இடங்கள் -3
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், கர்நாடக மாநிலத்தில் சட்டசபை தேர்தல் களம் சூடுபிடிக்கத்
தொடங்கி விட்டது.