சித்தராமையா முதல்-மந்திரியாக அறிவிக்கப்பட்டதாக வெளியான தகவலால் பெங்களூரு, மைசூருவில் ஆதரவாளர்கள் கொண்டாட்டம்

சித்தராமையா முதல்-மந்திரியாக அறிவிக்கப்பட்டதாக வெளியான தகவலால் பெங்களூரு, மைசூருவில் ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

Update: 2023-05-17 21:51 GMT

பெங்களூரு:

சித்தராமையா முதல்-மந்திரியாக அறிவிக்கப்பட்டதாக வெளியான தகவலால் பெங்களூரு, மைசூருவில் ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

பிடிவாதம்

கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 135 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்தது. மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்தாலும் முதல்-மந்திரியை தேர்ந்தெடுப்பதில் அக்கட்சி திணறி வருகிறது. சித்தராமையா, டி.கே.சிவக்குமார் இடையே முதல்-மந்திரி பதவியை கைப்பற்றுவதில் போட்டி இருந்து வருகிறது.

இருவரும் பிடிவாதமாக இருப்பதால், கட்சி மேலிடம் திணறி வருகிறது. இந்த நிலையில் டி.கே.சிவக்குமாரும், சித்தராமையாவும் கடந்த 2 நாட்களாக டெல்லியில் முகாமிட்டுள்ளனர். அவர்கள் நேற்று முன்தினம் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை தனித்தனியாக சந்தித்து பேசி இருந்தனர்.

சித்தராமையா முதல்-மந்திரியாக...

இந்த நிலையில் நேற்று முன்னாள் தலைவர் ராகுல்காந்தியை இருவரும் தனித்தனியாக சந்தித்து பேசினார். அப்போது சித்தராமையா முதல்-மந்திரியாக இருக்க அவர் கூறியதாக தகவல் வெளியானது. ராகுல்காந்தியை சந்தித்துவிட்டு வெளியே வந்த சித்தராமையா, தனது ஆதரவாளர்களை நோக்கி உற்சாகமாக கையசைத்தார். இதனால், கர்நாடகத்தின் புதிய முதல்-மந்திரியாக சித்தராமையா தேர்ந்தெடுக்கப்படுவார் என்று தகவல்கள் வெளியானது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு வராவிட்டாலும், சித்தராமையா தான் முதல்-மந்திரி என்று கூறப்பட்டது.

மேலும், கர்நாடக புதிய முதல்-மந்திரியாக சித்தராமையா இன்று (வியாழக்கிழமை) மதியம் 3.30 மணிக்கு பதவி ஏற்க உள்ளதாக விழா அழைப்பிதழ் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவியது. இதையடுத்து கன்டீரவா மைதானத்தில் பதவி ஏற்பு விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டன. சித்தராமையா முதல்-மந்திரியாகவும், டி.கே.சிவக்குமார் துணை முதல்-மந்திரியாகவும் பதவி ஏற்க உள்ளதாக கூறப்பட்டது.

கொண்டாட்டம்

இதனால் சித்தராமையாவின் ஆதரவாளர்கள் பெங்களூருவிலும், அவரது சொந்த ஊரான மைசூரு மாவட்டம் சித்தராமய்யனகுந்தியிலும் இனிப்பு வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினர். பெங்களூருவில் சித்தராமையாவின் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.

பெங்களூருவில் உள்ள சித்தராமையாவின் வீட்டின் முன்பு குவிந்த தொண்டர்கள், அவரது உருவப்படத்துக்கு பாலாபிஷேகம் செய்தும், இனிப்பு ஊட்டியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

ஏமாற்றம்

இந்த நிலையில் பதவி ஏற்பு விழா தகவலை காங்கிரஸ் கட்சி முற்றிலுமாக நிராகரித்துள்ளது. இதுகுறித்து டெல்லியில் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா நிருபர்களிடம் கூறுகையில், கர்நாடக புதிய முதல்-மந்திரி குறித்து பல்வேறு தகவல்கள் பரவி வருகின்றன. இது அனைத்தும் பொய்யானது. புதிய முதல்-மந்திரி யார் என்பதை நாளைக்குள் (இன்று) அறிவிக்கப்படும். வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்று தெரிவித்தார்.

இதனால் சித்தராமையாவின் ஆதரவாளர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர். கன்டீரவா மைதானத்தில் விழா ஏற்பாட்டு பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்