கர்நாடக சட்டசபை தேர்தலில் 73.19 சதவீதம் ஓட்டுகள் பதிவு: 34 மையங்களில் நாளை ஓட்டு எண்ணிக்கை

கர்நாடக சட்டசபை தேர்தலில் 73.19 சதவீதம் ஓட்டுகள் பதிவாகி உள்ளது. நாளை 34 மையங்களில் ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது. இதற்காக மாநிலம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Update: 2023-05-11 18:45 GMT

பெங்களூரு:

கர்நாடக சட்டசபை தேர்தலில் 73.19 சதவீதம் ஓட்டுகள் பதிவாகி உள்ளது. நாளை 34 மையங்களில் ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது. இதற்காக மாநிலம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

ஓட்டு எண்ணிக்கை

கர்நாடக சட்டசபை தேர்தலுக்காக ஓட்டுப்பதிவு நேற்று முன்தினம் நடைபெற்றது. மொத்தம் 58 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் 5 கோடிக்கும் அதிகமாக வாக்காளர்கள் ஓட்டுப்போட்டனர். இதில் மொத்தம் 73.19 சதவீத வாக்குகள் பதிவாயின. வாக்குகள் பதிவாகியுள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் சீல் வைக்கப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அந்த மாவட்டங்களில் உள்ள வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு சென்று வைக்கப்பட்டன. பின்னர் அந்த மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பத்திரமாக வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டன. அந்த மையங்களில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. துப்பாக்கி ஏந்திய போலீசார் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அந்த மையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. கர்நாடகம் முழுவதும் 34 மையங்களில் ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது. அதாவது ஒரு மாவட்டத்திற்கு ஒரு மையம் என்ற அளவில் வாக்கு எண்ணிக்கை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஓட்டு எண்ணிக்கைக்கு தகுந்தவாறு வாக்கு எண்ணிக்கையின் சுற்றுகள் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதற்கிடையே ஓட்டு எண்ணிக்கை மையங்களின் விவரம் வெளியாகி உள்ளது. அதன் விவரம் பின்வருமாறு:-

கலபுரகி-ராய்ச்சூர்

பெலகாவி மாவட்டத்தில் உள்ள சட்டசபை தொகுதிகளின் ஓட்டுகள் ராணி பார்வதி தேவி கல்லூரியில் எண்ணப்படுகிறது. பாகல்கோட்டை மாவட்ட தொகுதிகளின் ஓட்டுகள் தோட்டக்கலை அறிவியல் பல்கலைக்கழகம், விஜயாப்புரா மாவட்ட ஓட்டுகள் ராணுவ பள்ளி வளாகம், யாதகிரி மாவட்ட ஓட்டுகள் அரசு பி.யூ.கல்லூரி, கலபுரகியில் குல்பர்கா பல்கலைக்கழக வளாகம், பீதரில் பி.வி.பி. கல்லூரி, ராய்ச்சூரில் சேட் ரிகாப்சன்ட்பரஸ்மால் சுகனி பி.யூ.கல்லூரி, கொப்பலில் கவிசித்தேஸ்வரா கலை அறிவியல் கல்லூரி, கதக்கில் ஜெகத்குரு தொண்டதாரி என்ஜினீயரிங் கல்லூரி, தார்வாரில் விவசாய அறிவியல் பல்கலைக்கழகம்.

உத்தரகன்னடாவில் டாக்டர் ஏ.வி.பலிகா கலை அறிவியல் கல்லூரி, ஹாவோியில் அரசு என்ஜினீயரிங் கல்லூரி, விஜயநகரில் அரசு என்ஜினீயரிங் கல்லூரி, பல்லாரியில் ராவ் பகதூர் மகாபாலிஸ்வரப்பா என்ஜினீயரிங் கல்லூரி, சித்ரதுர்காவில் அரசு அறிவியல் கல்லூரி, தாவணகெரேயில் சிவகங்கோத்திரி பல்கலைக்கழகம், சிவமொக்காவில் சகயாத்திரி கலை கல்லூரி, உடுப்பியில் புனித சிசிலி கல்வி குழும வளாகம்.

தட்சிண கன்னடா

சிக்கமகளூருவில் இன்டவரா தொட்ட சித்தலிங்கேகவுடா கல்வி நிறுவனம், துமகூருவில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி, துமகூரு பல்கலைக்கழக அறிவியல் கல்லூரி, துமகூரு பல்கலைக்கழக கலை கல்லூரி, சிக்பள்ளாப்பூரில் அரசு முதல்நிலை கல்லூரி, கோலாரில் அரசு ஆண்கள் முதல் நிலை கல்லூரி, பெங்களூரு மாநகராட்சி மத்திய மாவட்டத்தில் பசவனகுடியில் உள்ள பி.எம்.எஸ். மகளிர் கல்லூரி, பெங்களூரு வடக்கில் வசந்த்நகரில் உள்ள மவுண்ட் கார்மெல் கல்லூரி, பெங்களூரு தெற்கில் ஜெயநகரில் உள்ள எஸ்.எஸ்.எம்.ஆர்.வி. கல்லூரி.

பெங்களூரு நகர மாவட்டத்தில் புனித ஜோசப் இன்டியன் உயர்நிலை பள்ளி மற்றும் பி.யூ.கல்லூரி, பெங்களூரு புறநகரில் தேவனஹள்ளியில் உள்ள ஆகாஸ் சர்வதேச உயர்நிலை பள்ளி, ராமநகரில் அரசு என்ஜினீயரிங் கல்லூரி, மண்டியாவில் மண்டியா பல்கலைக்கழகம், ஹாசனில் அரசு என்ஜினீயரிங் கல்லூரி, தட்சிண கன்னடாவில் தேசிய தொழில்நுட்ப கல்லூரி, குடகில் புனித ஜோசப் கான்வென்ட் பள்ளி, மைசூருவில் அரசு மகாராணி மகளிர் கல்லூரி, சாம்ராஜ்நகரில் அரசு என்ஜினீயரிங் கல்லூரி ஆகிய மையங்களில் ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது.

8 மணிக்கு தொடக்கம்

இந்த மையங்களில் ஓட்டு எண்ணிக்கை நாளை(சனிக்கிழமை) நடக்கிறது. ஓட்டு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்குகிறது. மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் என்பதால் தேர்தல் முடிவுகள் பகல் 1 மணிக்குள் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒவ்வொரு மையத்திலும் 14 மேஜைகள் போடப்பட்டுள்ளன. அதில் வாக்குச்சாவடி வாரியாக மின்னணு வாக்கு எந்திரங்கள் எடுத்து வரப்பட்டு வாக்குகள் எண்ணப்பட உள்ளன. ஒவ்வொரு சுற்று ஓட்டு எண்ணிக்கை நிறைவடைந்ததும், வேட்பாளர்கள் பெறும் வாக்கு விவரங்கள் அறிவிக்கப்படும். ஓட்டு எண்ணிக்கையை முன்னிட்டு கர்நாடகத்தில் இன்று மாலை 6 மணி முதல் 14-ந் தேதி காலை 6 மணி வரை மதுபான விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அசம்பாவித சம்பவங்களை தடுக்க மாநிலம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இறுதி ஓட்டு சதவீத விவரம்

கர்நாடக சட்டசபைக்கு நேற்று முன்தினம் தேர்தல் நடைபெற்றது. இதில் இறுதி ஓட்டு சதவீத விவரங்கள் வெளியாகியுள்ளன. அதன்படி 73.19 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 5 கோடியே 30 லட்சத்து 85 ஆயிரத்து 566 பேர். அதில் 3 கோடியே 88 லட்சத்து 51 ஆயிரத்து 807 பேர் வாக்களித்தனர். இதில் ஆண் வாக்காளர்கள் ஒரு கோடியே 96 லட்சத்து 58 ஆயிரத்து 398 பேரும், பெண் வாக்காளர்கள் ஒரு கோடியே 91 லட்சத்து 92 ஆயிரத்து 372 பேரும், 3-ம் பாலினத்தவர்கள் ஆயிரத்து 37 பேரும் வாக்களித்துள்ளனர். அதாவது ஆண் வாக்காளர்கள் ஓட்டு சதவீதம் 73.68, பெண் வாக்காளர்கள் ஓட்டு சதவீதம் 72.70, 3-ம் பாலினத்தவர்கள் ஓட்டு சதவீதம் 21.05 ஆகும்.

Tags:    

மேலும் செய்திகள்