தென்இந்தியாவில் பா.ஜனதாவை முதல் முறையாக ஆட்சியில் அமர்த்தியவர் எடியூரப்பா

தென்இந்தியாவில் பா.ஜனதாவை முதல் முறையாக ஆட்சியில் அமர்த்தியவர் எடியூரப்பா ஆவார்.

Update: 2023-04-24 18:45 GMT

பெங்களூரு:

கர்நாடக மாநிலத்தின் 19-வது முதல்-மந்திரியாக இருந்தவர் பி.எஸ்.எடியூரப்பா ஆவார். இவர் மண்டியா மாவட்டம் கே.ஆர்.பேட்டை தாலுகா புக்கனகெரே கிராமத்தில் கடந்த 1943-ம் ஆண்டு பிப்ரவரி 27-ந் தேதி பிறந்தார். இவரது பெற்றோர் சித்தலிங்கப்பா- புட்டதாயம்மா ஆவர். இவருக்கு துமகூரு மாவட்டம் எடியூரில் உள்ள புகழ்பெற்ற சிவதத்தி கோவிலில் பெயர் சூட்டு விழா நடைபெற்றது. எடியூரப்பா தனது 4 வயதில் அவரது தாயை இழந்தார். மண்டியாவில் தனது பள்ளி படிப்பை முடித்த எடியூரப்பா, தனது கல்லூரி நாட்களில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் சேர்ந்து பொது சேவையில் ஈடுபட்டு வந்தார்.

கடந்த 1965-ம் ஆண்டு சமூக நலத்துறையில் அரசு அதிகாரியாக பணியாற்றிய எடியூரப்பா, அந்த பணி பிடிக்காததால் அதில் இருந்து 2 ஆண்டுகளில் விலகினார். இதைதொடர்ந்து அவர் சிகாரிபுராவில் உள்ள அரிசி ஆலையில் 'கிளர்க்' பணியில் சேர்ந்தார். இதையடுத்து மித்ராதேவி என்ற பெண்ணை மணந்த எடியூரப்பாவிற்கு ராகவேந்திரா, விஜயேந்திரா என்ற 2 மகன்களும், அருணா தேவி, பத்மாவதி, உமாதேவி என்ற 3 மகள்களும் உள்ளனர். கடந்த 1970-ம் ஆண்டு சிகாரிபுரா பகுதியின் ஆர்.எஸ்.எஸ். செயலாளராக பதவியேற்ற எடியூரப்பா, கடந்த 1972-ம் ஆண்டு சிகாரிபுரா டவுன் பஞ்சாயத்திற்கு நடைபெற்ற உறுப்பினர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

மேலும் சிகாரிபுரா தாலுகாவின் ஆர்.எஸ்.எஸ். தலைவராக பதவியேற்ற இவர், நாடு முழுவதும் அவசர நிலை பிரகடனம் அமலில் இருந்தபோது கைது செய்யப்பட்டு பல்லாரி மற்றும் சிகாரிபுரா சிறைகளில் அடைக்கப்பட்டார். இதையடுத்து 1980-ம் ஆண்டு பா.ஜனதா கட்சியின் சிகாரிபுரா தொகுதி தலைவராக இவர் நியமிக்கப்பட்டார். மேலும் கடந்த 1983-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பா.ஜனதா சார்பில் சிகாரிபுரா தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற இவர் எம்.எல்.ஏ.வாக தேர்வானார். மேலும் அதே தொகுதியில் தொடர்ந்து 6 முறை போட்டியிட்டு எடியூரப்பா வெற்றிபெற்றது குறிப்பிடத்தக்கது.

கட்சியில் படிப்படியாக முன்னேறிய இவர், கடந்த 1985-ம் ஆண்டு சிவமொக்கா மாவட்ட பா.ஜனதா தலைவராக பொறுப்பேற்றார். மேலும் கடந்த 1988-ம் ஆண்டு மாநில பா.ஜனதா தலைவராக எடியூரப்பா நியமிக்கப்பட்டார். கடந்த 1994-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் சிகாரிபுரா தொகுதியில் வெற்றிபெற்ற இவரை சட்டசபை எதிர்க்கட்சி தலைவராக பா.ஜனதா நியமித்தது. 1999-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் தோல்வி அடைந்த எடியூரப்பா, பா.ஜனதா சார்பில் மேல்-சபை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 2004-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆட்சி அமைக்க பெரும்பான்மை கிடைக்கவில்லை.

இதையடுத்து ஜனதாதளம்(எஸ்) கட்சியுடன் இணைந்து காங்கிரஸ் கட்சி மாநிலத்தில் கூட்டணி ஆட்சியை அமைத்தது. முதல்-மந்திரியாக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தரம்சிங் பதவியேற்றார். அப்போது மீண்டும் பா.ஜனதா கட்சி சார்பில் எடியூரப்பா சட்டசபை எதிர்க்கட்சி தலைவராக நியமிக்கப்பட்டார். ஆனால் முன்னாள் பிரதமர் தேவேகவுடாவின் மகன் குமாரசாமி காங்கிரஸ் கட்சிக்கு கொடுத்த ஆதரவை திடீரென்று விலக்கி கொண்டு பா.ஜனதா உதவியுடன் அவர் முதல்-மந்திரியாக பதவியேற்றார். அப்போது 2 கட்சிகளும் தலா 20 மாதங்கள் மாநிலத்தில் ஆட்சி செய்வது என ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதைதொடர்ந்து குமாரசாமி மந்திரி சபையில் துணை முதல்-மந்திரியாக பதவியேற்ற எடியூரப்பா, நிதித்துறையை கவனித்து வந்தார்.

ஆனால் ஒப்பந்தபடி குமாரசாமி பதவி விலக மறுத்ததால் அவருக்கு வழங்கிய ஆதரவை பா.ஜனதா கட்சி திரும்ப பெற்றது. இதனால் கடந்த 2007-ம் ஆண்டு மாநிலத்தில் கவர்னர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து நடைபெற்ற நீண்ட பேச்சு வார்த்தைக்கு பிறகு எடியூரப்பா, முதல்-மந்திரியாக பதவியேற்க குமாரசாமி ஆதரவு வழங்கினார். ஆனால் ஆட்சியில் குமாரசாமியின் தலையீடு இருந்ததால் அதிருப்தி அடைந்த எடியூரப்பா பதவியேற்ற 7 நாட்களில் பதவி விலகினார். இதையடுத்து கடந்த 2008-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் சிகாரிபுரா தொகுதியில் போட்டியிட்ட எடியூரப்பா, தன்னை எதிர்த்து போட்டியிட்ட முன்னாள் முதல்-மந்திரி பங்காரப்பாவை தோற்கடித்து எம்.எம்.ஏ.வாக ஆனார்.

மேலும் அந்த தேர்தலில் பா.ஜனதா கட்சி சுயேச்சைகள் ஆதரவுடன் ஆட்சியை பிடித்தது. இதைதொடர்ந்து கடந்த 2008-ம் ஆண்டு மே 30-ந் தேதி எடியூரப்பா முதல்-மந்திரியாக பதவியேற்றார். தென்இந்தியாவில் பா.ஜனதாவை முதன்முதலாக ஆட்சி கட்டிலில் அமர்த்திய பெருமைக்கு சொந்தக்காரர் எடியூரப்பா என்றால் மிகையல்ல. ஆனால் இவரது ஆட்சி காலத்தில் பல்லாரி, துமகூரு, சித்ரதுர்கா ஆகிய மாவட்டங்களில் சட்டவிரோதமாக இரும்பு தாது வெட்டி எடுத்தது, பெங்களூரு, சிவமொக்கா ஆகிய பகுதியில் அரசு நிலங்களை முறைகேடாக ஒதுக்கியது உள்ளிட்ட புகார்கள் எழுந்தன. மேலும் இந்த புகாரில் உண்மை இருப்பதாக லோக்-அயுக்தா அமைப்பு விசாரணை அறிக்கை தாக்கல் செய்தது. இதனால் மேலிட தலைவர்களின் வற்புறுத்தலின் பேரில் கடந்த 2011-ம் ஆண்டு ஜூலை மாதம் 31-ந் தேதி எடியூரப்பா தனது முதல்-மந்திரி பதவியை விட்டு விலகும் நிலை ஏற்பட்டது.

இதனால் கட்சி தலைமை மீது அதிருப்தி அடைந்த எடியூரப்பா கடந்த 2012-ம் ஆண்டு நவம்பர் மாதம் 30-ந் தேதி தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். அதோடு கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் விலகுவதாக அறிவித்தார். இதையடுத்து கர்நாடக ஜனதா கட்சி என்ற புதிய கட்சியை தொடங்கிய எடியூரப்பா, கடந்த 2013-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் தனது கட்சி சார்பில் சிகாரிபுரா தொகுதியில் களம் இறங்கினார். மேலும் பா.ஜனதாவிற்கு எதிராக மாநிலம் முழுவதும் அவர் வேட்பாளரை நிறுத்தினார். ஆனால் அந்த தேர்தலில் எடியூரப்பா உள்ளிட்ட 6 பேர் மட்டுமே கர்நாடக ஜனதா கட்சி சார்பில் வெற்றி பெற்றனர்.

பின்னர் அவர் தனது ஆதரவாளர்களுடன் மீண்டும் பா.ஜனதா கட்சியில் சேர்ந்தார். கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் சிவமொக்கா தொகுதியில் போட்டியிட்ட இவர் வெற்றி பெற்று எம்.பி.யாக பதவியேற்றார். கடந்த 2018-ம் ஆண்டு நடந்த தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. பா.ஜனதா 104 இடங்களில் வெற்றி தனி பெரும் கட்சியாக உருவெடுத்தது. பின்னர் தனக்கு பெரும்பான்மை பலம் இருப்பதாக கூறி எடியூரப்பா ஆட்சி அமைத்தார். ஆனால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாததால் அவர் 7 நாட்களில் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து ஜனதாதளம்(எஸ்)-காங்கிரஸ் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்தது. பின்னர் கூட்டணி ஆட்சி கவிழ்த்து அதில் இருந்து 17 பேர் பா.ஜனதாவில் சேர்ந்தனர். இடைத்தேர்தலில் பா.ஜனதா சார்பில் போட்டியிட்டு 15 பேர் வெற்றி பெற்றனர். இதையடுத்து பா.ஜனதா கட்சி தனி பெரும்பான்மை கிடைத்ததை தொடர்ந்து கடந்த 2019-ம் ஆண்டு எடியூரப்பா மீண்டும் முதல்-மந்திரியாக பொறுப்பேற்றார். 2 ஆண்டுகள் முதல்-மந்திரி பதவியில் நீடித்த அவர், வயது மூப்பு காரணமாக அப்பதவியில் இருந்து விலகினார். இதையடுத்து தேர்தல் அரசியலில் இருந்து எடியூரப்பா ஓய்வு பெறுவதாக அறிவித்தார். எனினும் வருகிற சட்டமன்ற தேர்தலில் தனது கட்சியை ஆட்சியில் அமர்த்த எடியூரப்பா தீவிரமாக களப்பணியாற்றி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்