சிவசேனா கட்சிக்கு உரிமை கோரிய தாக்கரே - ஷிண்டே தரப்பினர்; ஆதாரங்களை தாக்கல் செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவு

சிவசேனா கட்சிக்கு உரிமை கோரி, ஏக்நாத் ஷிண்டே மற்றும் உத்தவ் தாக்கரே ஆகிய இருவரும் தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதினர்.

Update: 2022-07-23 07:03 GMT

மும்பை,

சிவசேனா கட்சிக்கு உரிமை கோரி, மராட்டிய முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே மற்றும் முன்னாள் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே ஆகிய இருவரும் தலைமை தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதினர்.

மராட்டியத்தில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இணைந்த மகா விகாஸ் அகாடி கூட்டணி ஆட்சி கடந்த மாதம் கவிழ்ந்தது. சிவசேனாவின் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் பிரிந்து பாஜகவுடன் இணைந்து ஆட்சியை அமைத்துள்ளனர்.

இந்நிலையில், 12 சிவசேனா எம்.பி.க்கள் சேர்ந்து தங்களை தனியாகச் செயல்பட அங்கீகரிக்குமாறு , மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவிடம் தனியாக மனு அளித்து உள்ளனர். இதனையடுத்து, சிவசேனா கட்சிக்கு உரிமை கோரி தலைமைத் தேர்தல் ஆணையத்துக்கு ஏக்நாத் ஷிண்டே தரப்பு கடிதம் எழுதியது.

முன்னதாக, ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அதிருப்தி குழுவை சிவசேனாவாக அங்கீகரிக்கக் கூடாது என்றும் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சி தலைமை தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதியது. மேலும் தாங்கள்தான் உண்மையான சிவசேனா என்றும், இந்த விவகாரத்தில் முடிவு எடுக்கும் போது தங்கள் தரப்பு வாதத்தையும் கேட்க வேண்டும் என்று கேவியட் மனுவையும் உத்தவ் தாக்கரே தரப்பு அளித்துள்ளது.

இந்நிலையில், தங்களுக்கு கட்சியின் வில் அம்பு சின்னத்தை ஒதுக்க வேண்டும் என்று தேர்தல் கமிஷனில் ஏக்நாத் ஷிண்டே அணி சார்பில் இரு நாள்களுக்கு முன்பு மனு அளிக்கப்பட்டது. மேலும், தங்களுக்கு மொத்தமுள்ள 55 எம்.எல்.ஏ.க்களில் 40 பேரும், மக்களவையில் மொத்தமுள்ள 18 பேரில் 12 பேரும் ஆதரவாக இருப்பதால் தேர்தல் கமிஷன் சட்டப்பிரிவு 15இன் கீழ் தங்களது அணியை உண்மையான சிவசேனாவாக அங்கீகரிக்க வேண்டும் என்றும் அதில் குறிப்பிட்டுள்ளார்.

உத்தவ் தாக்கரே தரப்பில், கட்சியின் மூத்த தலைவர் அனில் தேசாய் தேர்தல் கமிஷனுக்கு எழுதியுள்ள கடிதத்தில், கட்சிக்கு எதிராக செயல்படுபவர்கள் கட்சியின் சின்னத்தையோ அல்லது பால் தாக்கரே பெயரையோ பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு, ஏக்நாத் ஷிண்டே, உத்தவ் தாக்கரே ஆகிய அணிகளில் எந்த அணி உண்மையான சிவசேனா என்பதை நிரூபிக்க தங்களிடம் இருக்கும் ஆதாரங்களை தாக்கல் செய்யும்படி தேர்தல் கமிஷன் கடிதம் அனுப்பியுள்ளது.

மேலும், ஏக்நாத் ஷிண்டே தரப்பினர் எழுதிய கடிதத்தை உத்தவ் தாக்கரே முகாமுக்கு தேர்தல் ஆணையம் அனுப்பியுள்ளது. தாக்கரே முகாமின் கடிதத்தை ஷிண்டே பிரிவினருக்கு தேர்தல் ஆணையம் அனுப்பியது. இரு தரப்பினரும் ஆகஸ்ட் 8ம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்