சமுதாயத்தில் மாற்றம் ஏற்பட கல்வி அவசியம் ஜனாதிபதி திரவுபதி முர்மு பேச்சு

சமுதாயத்தில் மாற்றம் ஏற்பட கல்வி அவசியம் என்று ஜனாதிபதி முர்மு கூறினார்.

Update: 2022-09-27 18:45 GMT

பெங்களூரு:

தேசிய கல்வி கொள்கை

பெங்களூருவில் செயின்ட் ஜோசப் நிகர்நிலை பல்கலைக்கழக தொடக்க விழா நேற்று நடைபெற்றது. இதில் ஜனாதிபதி திரவுபதி முர்மு கலந்து கொண்டு அந்த பல்கலைக்கழகத்தை தொடங்கி வைத்து பேசியதாவது:-

ஒவ்வொரு மாணவருக்கும் கல்வி மிக முக்கியம். சமுதாயத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த கல்வி அவசியம். நாடு வளர்ச்சி அடைய வேண்டுமென்றால் அறிவியல், தொழில்நுட்பத்தில் நாம் வளர வேண்டும். நமது நாட்டில் உள்ள கல்வி நிறுவனங்களை தரமானவையாக மாற்ற தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

தேசிய கல்வி கொள்கை, தரமான கல்வியை வழங்குவதில் முக்கிய பங்காற்றும். இது கல்வித்துறையில் நேர்மறையான மாற்றங்களை ஏற்படுத்தும். கல்வி நிறுவனங்கள், மாணவர்களுக்கு நல்ல எதிர்காலத்தை அமைத்து கொடுக்க உரிய பயிற்சி அளிக்க வேண்டும்.இவ்வாறு திரவுபதி முர்மு பேசினார்.

தரமான கல்வி

அதைத்தொடர்ந்து பேசிய கவர்னர் தாவர்சந்த் கெலாட், 'நாட்டிலேயே பெங்களூருவில் தான் தரமான கல்வி கிடைக்கிறது. நாட்டின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மாணவர்கள் கல்வி பயில பெங்களூருவுக்கு வருகிறார்கள்' என்றார். அதன் பிறகு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பேசும்போது, 'அறிவாற்றலை வளர்த்துக்கொள்ள கல்வி முக்கியம். எந்த மாணவருக்கும் தரமான கல்வி கிடைக்காமல் இருக்கக்கூடாது' என்றார்.

இந்த விழாவில் உயர்கல்வித்துறை மந்திரி அஸ்வத் நாராயண் உள்பட பலர் கலந்து கொண்டனர். அதைத்தொடர்ந்து ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு விதான சவுதாவில் அரசு சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அந்த வரவேற்பை ஏற்று அவர் உரையாற்றினார். அதைத்தொடா்ந்து அவருக்கு விருந்து அளிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்