திகார் சிறையில் மணிஷ் சிசோடியாவிடம் அமலாக்கத்துறை விசாரணை: ஐதராபாத் மதுபான அதிபர் கைது

டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி திகார் சிறையில் மணிஷ் சிசோடியாவிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது. இவ்வழக்கில் ஐதராபாத் மதுபான தொழில் அதிபரை கைது செய்தது.

Update: 2023-03-07 21:51 GMT

கோப்புப்படம்

புதுடெல்லி,

டெல்லி அரசு, 2021-2022 நிதியாண்டில், மதுபான கொள்கையை உருவாக்கியது. அதன்படி, சில்லரை மதுபான கடைகளுக்கு உரிமங்கள் வழங்கப்பட்டது.

உரிம கட்டணம் ரத்து செய்யப்பட்டது. இதற்கு பிரதிஉபகாரமாக, டெல்லி அரசின் முக்கிய பிரமுகர்களுக்கு மதுபான அதிபர்கள் லஞ்சம் கொடுத்தனர்.

இந்த முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது. இவ்வழக்கில், கடந்த மாதம் 26-ந் தேதி டெல்லி துணை முதல்-மந்திரியாக இருந்த மணிஷ் சிசோடியாவை சி.பி.ஐ. கைது செய்தது.

அவர் 5 நாட்கள் சி.பி.ஐ. காவலில் வைத்து விசாரிக்கப்பட்டார். பின்னர், கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, இம்மாதம் 20-ந் தேதி நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளாா்.

சிறையில் விசாரணை

மணிஷ் சிசோடியா டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்தநிலையில், இந்த விவகாரத்தில் நடந்த சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறை தனியாக விசாரணை நடத்தி வருகிறது.

டெல்லி திகார் சிறைக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் நேரில் சென்றனர். மணிஷ் சிசோடியாவிடம் விசாரணை நடத்தினர். அவரிடம் 3 நாட்கள் விசாரணை நடத்த கோர்ட்டின் அனுமதியை அமலாக்கத்துறை பெற்றுள்ளது.

டெல்லி மதுபான கொள்கை ஊழலில் லஞ்சம் பெற்றது தொடர்பான ஆதாரங்கள் பதிவாகி இருந்த 170 செல்போன்களை அழித்தது தொடர்பாக மணிஷ் சிசோடியாவிடம் கேள்விகள் கேட்கப்பட்டன. கலால்துறை மந்திரி என்ற முறையில் எடுத்த கொள்கை முடிவுகள் குறித்து கேட்டனர்.

மதுபான அதிபர் கைது

இதற்கிடையே, டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில், ஐதராபாத்தை சேர்ந்த மதுபான அதிபர் அருண் பிள்ளையை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. அவரிடம் நீண்ட நேரம் விசாரணை நடத்திய பிறகு கைது நடவடிக்கை எடுக்கப்பட்டது.

ராபின் டிஸ்டில்லரிஸ் என்ற மதுபான நிறுவனத்தின் பங்குதாரராக அவர் இருக்கிறார். தெலுங்கானா மாநில முதல்-மந்திரி சந்திரசேகர ராவின் மகள் கவிதாவுடன் தொடர்புடைய 'தென்பகுதி' மதுபான குழுமத்தின் பிரதிநிதியாக செயல்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட மதுபான அதிபர் சமீர் மஹந்துருவுடன் அருண் பிள்ளைக்கு தொடர்பு உள்ளது.

உதவியாளரிடம் விசாரணை

இதற்கிடையே, மதுபான கொள்கை ஊழல் தொடர்பாக மணிஷ் சிசோடியாவின் தனி உதவியாளர் தேவேந்தர் சர்மாவிடம் சி.பி.ஐ. விசாரணை நடத்தியது. அதற்காக அவருக்கு ஏற்கனவே சி.பி.ஐ. சம்மன் அனுப்பி இருந்தது.

அதை ஏற்று, டெல்லி சி.பி.ஐ. தலைமையகத்தில் சர்மா ஆஜரானார். அவரிடம் சி.பி.ஐ.யின் ஊழல் தடுப்பு பிரிவு கேள்விகள் கேட்டது.

Tags:    

மேலும் செய்திகள்