இறங்கி வரும் அமலாக்கத்துறை: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 4-வது முறையாக சம்மன் அனுப்ப முடிவு?

மதுபான கொள்கை வழக்கில் டெல்லி துணை முதல்-மந்திரியாக இருந்த மணிஷ் சிசோடியா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

Update: 2024-01-04 04:44 GMT

புதுடெல்லி,

டெல்லியில் ஆம்ஆத்மி ஆட்சி நடந்து வருகிறது. முதல்-மந்திரியாக அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளார். கடந்த 2021 -ம் ஆண்டு நவம்பரில் அங்கு புதிய மதுபான கொள்கை அமல்படுத்தப்பட்டது. இந்த புதிய கொள்கையின் படி 32 மண்டலங்களாக டெல்லியை பிரித்து 849 சில்லறை விற்பனை நிலையங்களுக்கு மதுபானங்கள் விற்பனை செய்ய அனுமதி அளிக்கப்பட்டது.

இதில், ரூ.100 கோடிக்கும் மேல் முறைகேடு நடைபெற்றதாக குற்றம்சாட்டப்பட்டது. அதாவது, மதுபான கொள்கையில் இருந்த வரிக் குறைப்பு போன்ற முக்கிய சலுகைகள் குறித்த விபரங்கள் முன்கூட்டியே கசிய விடப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதன் மூலம் மதுபான ஆலை அதிபர்கள் மற்றும் விற்பனையாளர்கள் கோடிக்கணக்கில் லாபம் ஈட்டியதாக புகார்கள் எழுந்தன.

இதையடுத்து ஆளுநர் விகே சக்சேனா சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டார். சிபிஐ விசாரணை தொடங்கிய நிலையில் டெல்லி அரசு புதிய மதுபான கொள்கையை திரும்ப பெற்றது.அப்போது டெல்லி புதிய மதுபான கொள்கை ஊழலில் ஆம் ஆத்மி தலைவர்களுக்கு தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டது. மேலும் சட்டவிரோதமாக பணப்பரிமாற்றங்கள் நடந்தது, இந்த ஊழல் மூலம் கிடைக்கும் பணத்தை தேர்தலுக்கு ஆம்ஆத்மி கட்சி பயன்படுத்தியதாக சிபிஐ குற்றம் சாட்டியது. தொடர்ந்து அமலாக்கத்துறையும் இந்த வழக்கை கையில் எடுத்தது. இந்த வழக்கில் டெல்லி துணை முதல்-மந்திரியாக இருந்த மணிஷ் சிசோடியா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து, கடந்த நவம்பர் மாதம் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. ஆனால் தேர்தல் பிரசாரத்தை காரணம் காட்டி கெஜ்ரிவால் ஆஜராகவில்லை. இதையடுத்து கடந்த 21 ஆம் தேதி கெஜ்ரிவாலுக்கு சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது.

இதற்கும் கெஜ்ரிவால் ஆஜர் ஆகவில்லை. மூன்றாவது முறையாக நேற்று ஆஜராகுமாறு கெஜ்ரிவாலுக்கு சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது. சம்மனை ஏற்று அவர் ஆஜராகவில்லை. இந்த நிலையில், டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் இன்று கைது செய்யப்படலாம் என டெல்லியில் பரபரப்பாக பேசப்படுகிறது.

இந்தநிலையில், ஆம் ஆத்மி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், கெஜ்ரிவாலின் வீடு மற்றும் கட்சி அலுவலகங்களில் குவிந்து வருகின்றனர். மேலும் வீட்டிற்கு செல்லும் முக்கிய சாலைகள் மூடப்பட்டுள்ளன. போலீசார் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் கெஜ்ரிவாலுக்கு 4 வது முறையாக சம்மன் அனுப்ப அமலாக்கத்துறை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்