தத்தா கோவிலை நிர்வகிக்க 8 பேர் கொண்ட நிர்வாக குழு நியமனம்

தத்தா கோவிலை நிர்வகிக்க 8 பேர் கொண்ட நிர்வாக குழுவை கர்நாடக அரசு நியமித்துள்ளது.

Update: 2022-11-19 18:45 GMT

சிக்கமகளூரு:

தத்தா கோவிலை நிர்வகிக்க 8 பேர் கொண்ட நிர்வாக குழுவை கர்நாடக அரசு நியமித்துள்ளது.

தத்தா பீடம்

சிக்கமகளூரு மாவட்டம் சந்திரதிரிகோண மலையில் உள்ளது பாபாபுடன்கிரி மலை. இந்த மலையில் தத்தா கோவில் அமைந்துள்ளது. அங்கு தத்தா பீடம் மற்றும் பாதம் அமைந்திருக்கிறது. இதனால் ஒவ்வொரு வருடமும் இந்து அமைப்பினர் தத்தா கோவிலுக்கு வந்து தத்தா பாதத்தை தரிசித்து செல்கிறார்கள். இந்த கோவிலில் பாபாபுடன் வீற்றிருப்பதாக கூறி முஸ்லிம்களும் சொந்தம் கொண்டாடி வருகிறார்கள். இதனால் இந்த கோவிலை இந்துக்களும், முஸ்லிம்களும் சொந்தம் கொண்டாடி கர்நாடக ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, கர்நாடக அரசு தத்தா கோவிலை தலைமை ஏற்று வழி நடத்தவேண்டும் என்று கூறி உத்தரவிட்டார். இதற்காக நிர்வாக குழு ஒன்றையும் நியமிக்கும்படி கர்நாடக அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து மாநில அரசு, நிர்வாக குழு ஒன்றை நியமிப்பதற்காக நடவடிக்கையில் ஈடுபட்டது. இதற்காக பல்வேறு கட்ட முயற்சிகளை மேற்கொண்டது.

8 பேர் நியமனம்

இந்நிலையில் நேற்று இந்த நிர்வாக குழு தலைவர்களுக்கான போட்டி நடந்தது. இதில் 43 பேர் நிர்வாக குழு தலைவர் பொறுப்பிற்கு விண்ணப்பித்து இருந்தனர். அவர்களில் 8 பேரை மாநில அரசு தேர்வு செய்தது. நேற்று அவர்கள் 8 பேரை நிர்வாக குழு உறுப்பினர்களாக மாநில அரசு நியமித்து அறிவிப்பை வெளியிட்டது. இவர்கள் அனைவரும் அரசியல் பின்னணி அல்லாதவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் மாநில அரசின் இந்த நடவடிக்கையை சிக்கமகளூரு தொகுதி எம்.எல்.ஏ. சி.டி.ரவி பாராட்டியுள்ளார். இந்த குழுவினர்களில் ஒருவர் தலைவராக தேர்வு செய்யப்படுவார்கள். தலைவரை தேர்வு செய்யும் பொறுப்பும் அந்த குழுவினருக்கே வழங்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் 7 பேர் இந்துக்களும், ஒரு முஸ்லிமும் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் இந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் பிரச்சினை இல்லாத வகையில் இந்த கோவிலை நிர்வகிப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்