பெங்களூரு சந்தையை பார்வையிட்ட வெளிநாட்டு யூடியூபரை தாக்கிய நபர் - அதிர்ச்சி வீடியோ
உள்ளூர் சந்தையை பார்வையிட சென்ற வெளிநாட்டு யூடியூபர் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரு,
நெதர்லாந்து நாட்டை சேர்ந்த யூடியூபர் பெட்ரொ மொடா. இவர் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அது தொடர்பான வீடியோக்களை தனது சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.
இந்நிலையில், பெட்ரோ மொடா கடந்த ஞாயிற்றுக்கிழமை கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ஜோர் பசார் என்ற ஞாயிற்றுக்கிழமை சந்தை பகுதிக்கு சென்றுள்ளார்.
சந்தை பகுதியில் விற்பனை செய்யப்படும் ஆடை, உள்ளிட்ட பொருள்களை தனது கேமராவில் பதிவு செய்தவாறு சென்றுகொண்டிருந்தார்.
அப்போது, சந்தை பகுதியில் நின்றுகொண்டிருந்த நபர் திடீரென யூடியூபர் மொடாவின் கையை பிடித்து இழுத்து அத்துமீறியுள்ளார். அவரிடமிருந்து சமாதானமாக சென்றுவிடவேண்டுமென எண்ணிய மொடா தனது கையை விடும்படி கூறியுள்ளார்.
ஆனால், அந்த நபர் திடீரென யூடியூபர் மொடா மீது தாக்குதல் நடத்தினார். இதனால் அதிர்ச்சியடைந்த யூடியூபர் அங்கிருந்து வேகமாக ஓடி தாக்குதலில் இருந்து தப்பிச்சென்றார். இந்த சம்பவம் அனைத்தையும் கேமராவில் பதிவு செய்த மொடா அந்த வீடியோவை தனது யூடியூப் பக்கத்தில் பதிவிட்டு தனது மோசமான அனுபவத்தையும் பகிர்ந்தார்.
இது தொடர்பான வீடியோ சமூகவலைதளத்தில் வைரலான நிலையில் தாக்குதல் நடத்திய நபரை கைது செய்யவேண்டுமென கோரிக்கை எழுந்தது. இந்த விவகாரம் தொடர்பாக வழக்குப்பதிவு போலீசார் யூடியூபரை தாக்கிய நவாப் ஹயத் ஷெரிப் என்ற நபரை கைது செய்தனர்.