பயங்கர ஆயுதங்களால் தாக்கி டிரைவர் கொலை; காய்கறி வியாபாரி கைது
மது குடிக்கும்போது ஏற்பட்ட தகராறில் பயங்கர ஆயதங்களால் தாக்கி டிரைவர் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக காய்கறி வியாபாரி கைது செய்யப்பட்டார்.
வர்த்தூர்:
கொலை
பெங்களூரு தொம்மசந்திராவை சேர்ந்தவர் முனியப்பா (வயது 45). டெம்போ டிரைவர். அதே பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீதர். இவர் காய்கறி வியாபாரி. இந்த நிலையில் நேற்று அந்த பகுதியில் உள்ள மதுக்கடைக்கு முனியப்பா மற்றும் ஸ்ரீதர் மது குடிக்க சென்றனர். அப்போது அவர்கள் மது குடித்த போது, 2 பேருக்கும் இடையே திடீரென வாக்குவாதம் உண்டானது.
இதையடுத்து இருவரும் ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கி உள்ளனர். அந்த சமயத்தில் ஸ்ரீதர் அந்த பகுதியில் கிடந்த பயங்கர ஆயுதங்களை கொண்டு, முனியப்பாவை தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த முனியப்பா, சரிந்து விழுந்து உயிரிழந்தார்.
கைது
இதையடுத்து அங்கிருந்த ஸ்ரீதர் தப்பி ஓடி தலைமறைவானார். இதற்கிடையே அந்த பகுதியில் இருந்தவர்கள் வர்த்தூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அந்த தகவலின்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர். மேலும், தொழிலாளியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
முதற்கட்ட விசாரணையில் ஸ்ரீதருக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளதாக அவரது தந்தையிடம், முனியப்பா புகார் கூறி உள்ளார். இதனால் அவரது தந்தை, ஸ்ரீதரை திட்டி உள்ளார். இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் மதுக்கடைக்கு சென்று, முனியப்பாவை கொலை செய்தது தெரிந்தது. இதற்கிடையே கொலை செய்துவிட்டு தலைமறைவான ஸ்ரீதரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.