மராட்டிய அரசியலில் அதிரடி திருப்பம்; ஏக்நாத் ஷிண்டே முதல்-மந்திரி பதவி ஏற்றார்
மராட்டிய அரசியலில் அதிரடி திருப்பமாக சிவசேனா அதிருப்தி அணி தலைவர் ஏக்நாத் ஷிண்டே முதல்-மந்திரி பதவி ஏற்றார். பா.ஜனதாவை சேர்ந்த தேவேந்திர பட்னாவிஸ் துணை முதல்-மந்திரி ஆனார்.
மும்பை,
தீவிர இந்துத்வா மற்றும் மண்ணின் மைந்தர் கொள்கை கொண்டது சிவசேனா.
சுமார் 25 ஆண்டுகளுக்கு மேலாக அக்கட்சி பா.ஜனதாவுடன் நட்பு பாராட்டி வந்தது.
எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி
இதன் பலனாக கடந்த 1995-ம் ஆண்டு சிவசேனா- பா.ஜனதா கூட்டணி ஆட்சி அமைந்தது. அதன்பின்னர் ஆட்சியை பறிகொடுத்த இந்த கூட்டணி கட்சிகள் மீண்டும் 2014-ம் ஆண்டு ஆட்சியை கைப்பற்றின.
அடுத்து 2019-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் இரு கட்சிகளும் அமோக வெற்றி பெற்று 3-வது முறையாக ஆட்சி கட்டிலில் அமர காத்திருந்த நிலையில், முதல்-மந்திரி பதவியை தங்களுக்கு 2½ ஆண்டு காலம் விட்டு தர வேண்டும் என பா.ஜனதாவை சிவசேனா வற்புறுத்தியது.
இதில் உடன்பாடு ஏற்படா ததால், தனது கொள்கைக்கு முரண்பட்ட காங்கிரஸ், தேசிய வாத காங்கிரஸ் கட்சிகளுடன் இணைந்து சிவசேனா அதிரடியாக ஆட்சியமைத்தது. சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே 2½ ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சி தேரை நகர்த்தி வந்த நிலையில், அவருக்கு எதிராக திடீரென கடந்த 20-ந் தேதி சொந்த கட்சி எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி தூக்கினர்.
தகுதிநீக்க நோட்டீஸ்
உத்தவ் தாக்கரேயின் விசுவாசியாக கருதப்பட்ட ஏக்நாத் ஷிண்டே சிவசேனாவின் பெரும்பாலான எம்.எல்.ஏ.க்களை தன் வசப்படுத்தி, குஜராத், அசாம் மற்றும் கோவா மாநிலங்களில் உள்ள சொகுசு ஓட்டல்களில் முகாமிட செய்தார். அவர்கள் அங்கிருந்தபடி தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் உறவை முறித்து கொண்டு, பா.ஜனதாவுடன் இணைந்து ஆட்சியமைக்க வேண்டும் என்று சிவசேனா தலைமையை வலியுறுத்தினர்.
ஆனால் உத்தவ் தாக்கரே அவர்களின் வற்புறுத்தலுக்கு பணிய மறுத்து விட்டார். மேலும் ஓட்டலில் முகாமிட்ட அதிருப்தி எம்.எல்.ஏ.க் களில் 16 பேரை தகுதிநீக்கம் செய்ய துணை சபாநாயகரை சிவசேனா தலைமை கேட்டுக்கொண்டது.
அதனை ஏற்று துணை சபாநாயகர் அனுப்பிய தகுதிநீக்க நோட்டீசுக்கு சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடை விதித்ததால், அதிருப்தி எம்.எல்.ஏ.க் களும் அவர்களுடன் சேர்ந்து ஆட்சியமைக்க காய்நகர்த்தி வந்த பா.ஜனதாவினரும் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு, உத்தவ் தாக்கரே அரசு கவிழவும், புதிய அரசு அமையவும் வழிவகுத்து கொடுத்தது.
உத்தவ் தாக்கரே ராஜினாமா
சட்டசபையில் மெஜாரிட்டியை நிரூபிக்க உத்தவ் தாக்கரே அரசுக்கு கவர்னர் உத்தரவிட, அதை எதிர்த்து சிவசேனா சுப்ரீம் கோர்ட்டில் முறையிட்டது. ஆனால் சிவசேனாவின் கோரிக்கையை ஏற்க மறுத்து, சட்டசபையில் பலப்பரீட்சை நடத்த தடை விதிக்க முடியாது என்று சுப்ரீம் கோர்ட்டு கூறி விட்டது.
இந்த தீர்ப்பு நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு வெளியானதை அடுத்து மராட்டிய அரசியல் களத்தில் புதிய திருப்பம் ஏற்பட்டது. சட்டசபையில் பலப்பரீட்சைக்காக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த விருப்பம் இல்லை என்று கூறிய உத்தவ் தாக்கரே அன்று இரவே முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்தார்.
மும்பை திரும்பிய ஷிண்டே
இதனால் மராட்டிய அரசியல் களம் மீண்டும் விறுவிறுப்பு அடைந்தது. கோவாவில் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுடன் முகாமிட்டு இருந்த ஏக்நாத் ஷிண்டே நேற்று காலை மும்பை திரும்பினார். அவர் பா.ஜனதா முன்னாள் முதல்-மந்திரியும், சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான தேவேந்திர பட்னாவிசை அவரது வீட்டில் சந்தித்து பேசினார்.
இதையடுத்து அவர்கள் இருவரும், பா.ஜனதா தலைவர்கள் புடைசூழ ராஜ்பவன் சென்று கவர்னர் பகத்சிங் கோஷ்யாரியை சந்தித்தனர். அப்போது, தங்களுக்கு பெரும்பான்மை பலம் இருப்பதாக கூறி ஆட்சியமைக்க உரிமை கோரினர். இதை கவர்னர் உடனடியாக ஏற்றுக்கொண்டார். இதுமட்டுமின்றி தேவேந்திர பட்னாவிசுக்கும், ஏக்நாத் ஷிண்டேக்கும் கவர்னர் இனிப்பு ஊட்டினார்.
இதையடுத்து பா.ஜனதாவை சேர்ந்த தேவேந்திர பட்னாவிஸ் முதல்-மந்திரியாகவும், சிவசேனா அதிருப்தி தலைவர் ஏக்நாத் ஷிண்டே துணை முதல்-மந்திரியாகவும் பதவி ஏற்பார்கள் என அனைவராலும் நம்பப்பட்டது.
எதிர்பாராத திருப்பம்
ஆனால் கவர்னரை சந்தித்து விட்டு வெளியே வந்து இருவரும் பேட்டி அளித்தார்கள். அப்போது, தேவேந்திர பட்னாவிஸ் கூறுகையில், "ஏக்நாத் ஷிண்டே இரவு 7.30 மணி அளவில் முதல்-மந்திரியாக பதவி ஏற்பார். நான் ஆட்சியில் பங்கேற்க மாட்டேன். மந்திரி சபை பின்னர் விரிவாக்கம் செய்யப்படும். அப்போது அதிருப்தி சிவசேனா எம்.எல்.ஏ.க்கள், பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள், சுயேச்சைகள் மந்திரி சபையில் இடம்பெறுவார்கள்" என்றார்.
இந்த அறிவிப்பு யாரும் எதிர்பாராத வகையில் அதிரடி திருப்பமாக அமைந்தது. சிவசேனா அதிருப்தி அணி தலைவர் ஏக்நாத் ஷிண்டே திடீர் முதல்-மந்திரியாக பதவி ஏற்க இருப்பது அரசியல் ஆர்வலர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டது.
இதற்கிடையே தேவேந்திர பட்னாவிசும் ஆட்சியில் பங்கேற்க வேண்டும் என்று பா.ஜனதா தலைவர் ஜே.பி. நட்டா திடீர் அறிவிப்பை வெளியிட்டார். இதை ஒப்புக்கொண்ட தேவேந்திர பட்னாவிஸ், தான் துணை முதல்-மந்திரியாக பதவி ஏற்பேன் என்று தெரிவித்தார்.
பதவி ஏற்பு
மற்றொரு புறம் கவர்னர் மாளிகையில் பதவி ஏற்பு விழா தடபுடலாக நடந்தது. திட்டமிட்டப்படி சரியாக 7.30 மணிக்கு பதவி ஏற்பு விழா தொடங்கியது. ஏக்நாத் ஷிண்டே முதல்-மந்திரியாக பதவி ஏற்றுக்கொண்டார். அவர் சிவசேனா நிறுவனர் பால்தாக்கரே மற்றும் தனது அரசியல் குருநாதர் ஆனந்த் திகே பெயரை கூறி பதவி ஏற்றார்.
அவருக்கு கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
இதேபோல தேவேந்திர பட்னாவிஸ் துணை முதல்-மந்திரியாக பதவி ஏற்றுக்கொண்டார். பதவி ஏற்பு விழா 12 நிமிடங்களில் முடிந்தது.
இதன் மூலம் மராட்டியத்தில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக நீடித்து வந்த அரசியல் பரபரப்பு, குழப்பத்துக்கு விடியல் கிடைத்தது.
நம்பிக்கை வாக்கெடுப்பு
அடுத்து புதிய முதல்-மந்திரியாக பதவி ஏற்ற ஏக்நாத் ஷிண்டே சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி பெரும்பான்மையை நிரூபிப்பார். அதன் பின்னர் மந்திரி சபை விஸ்தரிப்பு நடைபெறும்..
288 உறுப்பினர்களை கொண்ட மராட்டிய சட்டசபையில் தற்போதைய பலம் 287 ஆக உள்ளது. இதனால் பெரும்பான்மையை நிரூபிக்க 144 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவை. ஏக்நாத் ஷிண்டே அரசுக்கு 170 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருப்பதாக பா.ஜனதா மூத்த தலைவர் கிரிஷ் மகாஜன் தெரிவித்தார்.
பிரதமர் வாழ்த்து
புதிய முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டேக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து உள்ளார். அவரது அரசியல் அனுபவம், நிர்வாக திறன் மராட்டியத்தை புதிய உச்சத்துக்கு கொண்டு செல்லும் என்று கூறியுள்ளார்
அதுபோல துணை முதல்-மந்திரி பதவி பெற்ற தேவேந்திர பட்னாவிசுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து உள்ளார்.