சந்தேகம்... 150 போன் கால்கள்; குழந்தை பெற்ற 2 வாரத்தில் மனைவி படுகொலை
பிரதீபாவை கொல்வதற்கு முன், அவருடைய கணவர் விஷம் குடித்து தற்கொலை செய்ய முயன்றார் என போலீசார் தெரிவித்தனர்.
பெங்களூரு,
கர்நாடகாவின் கோலார் மாவட்டத்தின் வீரப்புரா பகுதியை சேர்ந்தவர் கிஷோர் (வயது 32). இவருக்கு கடந்த ஆண்டு நவம்பரில், பிரதீபா (வயது 23) என்பவருடன் திருமணம் நடந்தது.
கிஷோர் காவல் துறையில் பணிபுரிந்து வருகிறார். பிரதீபா கணினி அறிவியல் படித்துள்ளார். பிரசவத்திற்காக தாய் வீட்டில் இருந்த பிரதீபாவுக்கு, கடந்த சில நாட்களுக்கு முன் ஆண் குழந்தை பிறந்தது.
இந்நிலையில், கடந்த ஞாயிற்று கிழமை மாலை கிஷோர் மற்றும் பிரதீபா இடையே நடந்த உரையாடலில் வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது என கூறப்படுகிறது. இதில், புதிதாக தாயான பிரதீபா ஒரு கட்டத்தில் அழுதிருக்கிறார்.
இதனால், தொலைபேசி அழைப்பை துண்டித்து விட்டு, கிஷோருடன் பேசாமல் இருக்கும்படி பிரதீபாவின் தாயார் கூறியிருக்கிறார். கடந்த திங்கட்கிழமை மொபைல் போனை பிரதீபா பார்த்தபோது, அதில் 150 மிஸ்டு கால்கள் கிடந்துள்ளன.
அதன்பின், மனைவி வீட்டுக்கு வந்த கிஷோர், அறையொன்றை பூட்டி விட்டு, மனைவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதில், ஆத்திரத்தில் பிரதீபாவை கொன்று விட்டார். செல்லும் முன்பு, கொன்று விட்டேன், அவளை கொன்று விட்டேன் என பிரதீபாவின் தாயாரிடம் கூறி விட்டு கிஷோர் தப்பியுள்ளார்.
இந்த விவகாரத்தில், மனைவிக்கு மற்றொரு நபருடன் தொடர்பு உள்ளது என கிஷோர் சந்தேகித்துள்ளார் என போலீசார் கூறுகின்றனர். இந்த சம்பவத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார் கிஷோரை கைது செய்தனர்.
அவர் பிரதீபாவை கொல்வதற்கு முன், விஷம் குடித்து தற்கொலை செய்ய முயன்றுள்ளார் என போலீசார் தெரிவித்தனர். இந்த விவகாரத்தில் வேறு 3 பேரும் கைது செய்யப்பட்டு உள்ளனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.