சச்சின் பைலட்டிற்கு கதவுகள் திறந்தே இருக்கின்றன: தூது விடும் பாஜக
ராஜஸ்தான் காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்டுள்ள இந்த நெருக்கடி குறித்து கருத்து தெரிவித்த பாஜக, தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினை அக்கட்சியின் உள்விவகாரம் என்று தெரிவித்துள்ளது
ஜெய்பூர்,
ராஜஸ்தான் முதல் மந்திரி அஷோக் கெலாட், காங்கிரஸ் தலைவர் பதவிக்குப் போட்டியிட விருப்பம் தெரிவித்து இருந்தார். ஆனால், அவர் கட்சித் தலைவராகும் பட்சத்தில், சச்சின் பைலட்டை ராஜஸ்தான் முதல் மந்திரியாக்க காங்கிரஸ் மேலிடம் திட்டமிட்டது.
இதற்கு அஷோக் கெலாட் ஆதரவு எம்எல்ஏக்கள் 90 பேர் எதிர்ப்பு தெரிவித்து போர்க்கொடி தூக்கினர். சச்சின் பைலட் முதல்வராக அறிவிக்கப்பட்டால் தாங்கள் தங்கள் எம்.எல்.ஏ பதவிகளை ராஜினாமா செய்வோம் எச்சரிக்கை விடுத்தனர். எம்.எல்.ஏக்களின் இந்த அச்சுறுத்தலின் பின்னணியில் அஷோக் கெலாட் இருப்பதாகக் கருதிய காங்கிரஸ் மேலிடம், அவர் மீது கடும் அதிருப்தி அடைந்ததாகக் கூறப்பட்டது. இதற்கிடையே, அசோக் கெலாட் காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிட மாட்டார் என்றும் ஒரு தகவல் பரவி வருகிறது.
ராஜஸ்தான் காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்டுள்ள இந்த நெருக்கடி குறித்து கருத்து தெரிவித்த பாஜக, தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினை அக்கட்சியின் உள்விவகாரம் என்றும் எனினும் சச்சின் பைலட்டிற்கு பாஜகவின் கதவுகள் திறந்தே இருக்கின்றன" என்று தெரிவித்துள்ளது.