வளர்ப்பு பிராணிகளால் பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு தொல்லையா?
வளர்ப்பு பிராணிகளால் பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு தொல்லையா என்பதற்கு நாய் வளர்ப்போர், பொதுமக்கள் தங்களது கருத்துகளை கூறியுள்ளனர்.
பெங்களூரு:
வளர்ப்பு பிராணிகளால் பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு தொல்லையா என்பதற்கு நாய் வளர்ப்போர், பொதுமக்கள் தங்களது கருத்துகளை கூறியுள்ளனர்.
பிள்ளை போல பாவித்து...
பெங்களூரு உள்ளிட்ட பெருநகரங்களில் வசிப்போர் தங்களது வீடுகளில் நாய்கள், பூனை, கிளி, லவ் பேர்ட்ஸ் உள்ளிட்டவற்றை வளர்த்து வருகிறார்கள். இருப்பினும் பெரும்பான்மையானவர்கள் நாய்களை வளர்ப்பதில் விருப்பம் கொண்டவர்களாக உள்ளனர். அந்த வளர்ப்பு நாய்களுக்கு பிறந்தநாள் கொண்டாடுவது, பெண் நாய்கள் கர்ப்பமானால் அதற்கு சீமந்தம் நடத்துவது என்று தங்களது செல்லப்பிராணிகள் மீதான பாசத்தையும், அன்பையும் இவ்வாறு வெளிப்படுத்தி வருகிறார்கள்.
அதற்கு ஏற்றார்போல் நாய்கள், தங்களது எஜமான்களுக்கு விசுவாசமாக இருந்து வருகிறது. வீட்டுக்குள் புகுந்த பாம்புகளை கொன்று எஜமானை காத்த வளர்ப்பு நாய் என்ற செய்திகளை அடிக்கடி நாம் கேள்வி பட்டிருப்போம்.
வீட்டிற்கு பாதுகாப்பு அளிக்கவும், பொழுது போக்கிற்காகவும் ஏராளமானோர் செல்ல பிராணியாக நாய்களை வளர்த்து வருகின்றனர். மேலும் ஒரு சிலர் நாயை தனது பிள்ளைகள் போல பாவித்து வளர்த்து வருகின்றனர். தாங்கள் ஆசையாக வளர்த்து வரும் நாய் இறந்து விட்டால் உரிமையாளர்கள் சாப்பிடாமல் இருக்கும் சம்பவங்களும், உரிமையாளர்கள் இறந்து விட்டால் நாய்கள் சாப்பிடாமல் சோகத்தில் இருக்கும் சம்பவங்களும் கூட அரங்கேறி உள்ளன. இந்த நிலையில் வீடுகளில் வளர்த்து வரும் நாய்களால் பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு தொல்லை ஏற்படும் சம்பவங்களும் நடந்து வருகின்றன.
சேட்டை செய்யும் நாய்கள்
அதாவது வீடுகளில் வளர்த்து வரும் நாய்கள் இரவு நேரங்களில் தொடர்ந்து குரைத்து கொண்டே இருப்பது, பக்கத்து வீட்டு சுவர்களில் அசுத்தம் செய்வது போன்றவை நடந்து வருகிறது. மேலும் தெருவில் நடைபயிற்சிக்கு அழைத்து செல்லும் போது தெருநாய்களை கண்டால் அந்த நாய்களுடன் மல்லுக்கட்டுகின்றன.
இது பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்துவதுடன், நாய் வளர்ப்பவர்கள்-பக்கத்து வீட்டுக்காரர்கள் இடையே மோதலுக்கும் வழிவகுத்து விடுகிறது. இந்த மோதலின் போது நாய்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. கடந்த செப்டம்பர் மாதம் கூட கே.ஆர்.புரத்தில் பக்கத்து வீட்டு நாய் மீது கட்டையால் தாக்குதல் நடத்தியதாக ராகுல், ரஜத், ரஞ்சித் ஆகிய 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து இருந்தனர்.
பெண், மகள் தற்கொலை
இதுபோல பெங்களூருவில் வசித்து வந்த திவ்யா என்ற பெண்ணும், அவரது மகள் ஹூருதியாவும் செல்லமாக ஒரு நாயை வளர்த்து வந்தனர். இந்த நிலையில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்த திவ்யாவிடம் நாயை கொடுக்க வேண்டாம் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி இருந்தனர். இதனால் திவ்யாவுக்கும், அவரது மகளுக்கும் நாயை கொடுக்க குடும்பத்தினர் மறுத்து விட்டனர்.
இதனால் மனம் உடைந்த திவ்யாவும், ஹூருதியாவும் தற்கொலை செய்து கொண்ட சம்பவமும் நடந்தது. மேலும் சமீபத்தில் பெங்களூரு ஜே.பி.நகரில் பக்கத்துவீட்டில் வளர்க்கப்படும் கோழி கூவுவதால் நிம்மதியாக தூங்க முடியவில்லை என்று வடமாநில ஐ.டி. ஊழியர் போலீசில் புகார் கொடுத்த சம்பவம் அரங்கேறியது.
வீட்டில் வளர்க்கப்பட்டு வரும் நாய்களால் தொல்லை இருப்பதாக பக்கத்து வீட்டுக்காரர்கள் குற்றச்சாட்டு தெரிவித்து வருவது பற்றி நாய் வளர்ப்போர் மற்றும் பொதுமக்களிடம் கருத்து கேட்கப்பட்டது. இதற்கு அவர்கள் கூறிய கருத்துகள் பின்வருமாறு:-
சுயநலத்திற்காக....
பெங்களூரு பிரிகேட் ரோட்டில் வசித்து வரும் ஹென்ரிட்டா, "நான் எனது வீட்டில் கடந்த 2 ஆண்டுகளாக நாய் வளர்த்து வருகிறேன். எனது நாயால் பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு ஒருபோதும் தொல்லை ஏற்பட்டது இல்லை. நான் எனது நாயை நல்ல முறையில் வளர்த்து வருகிறேன். அதுபோல வீட்டில் நாய் வளர்த்து வருபவர்களும் தங்களது நாயை ஒழுக்கமாக வளர்க்க வேண்டும். அப்படி வளர்த்தால் பக்கத்து வீட்டுக்காரர்களுடன் எந்த பிரச்சினையும் வராது. நாயை வளர்க்கிறோம் என்ற பெயரில் அடுத்தவர்களுக்கு தொந்தரவு ஏற்படுத்த கூடாது. நமது சுயநலத்திற்காக அடுத்தவர்களுக்கு கஷ்டம் கொடுக்க கூடாது" என்றார்.
ஒருவிதத்தில் நல்லது தான்
கோரமங்களாவில் வசித்து வரும் திலீப், "வீட்டில் வளர்க்கப்படும் நாய்கள் எப்போதும் நன்றி உள்ளவை தான். எஜமானர்களுக்கு ஏதாவது ஒன்று என்றால் நாய்கள் தங்களது உயிரை கொடுக்க கூட தயங்காது. எங்கள் வீட்டின் அருகேயும் சிலர் நாய் வளர்த்து வருகின்றனர். இரவில் அந்த நாய்கள் குரைக்க தான் செய்கின்றன. இதனால் தொல்லையாக தான் உள்ளது. ஆனாலும் பக்கத்து வீட்டுக்காரர்கள் நாய் வளர்த்து வருவது ஒருவிதத்தில் நமக்கும் நல்லது தான். நாம் எங்கேயாவது வெளியூர் சென்று விட்டால் திருடர்கள் வரும் நேரத்தில் நாய்கள் குரைத்து எச்சரிக்கை கொடுக்கும். பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு இடையூறு ஏற்படுத்தாதவாறு நாய் வளர்க்கலாம் என்பது எனது கருத்து" என்றார்.
இரவில் வெளியே விடுவது ஏன்?
ராஜாஜிநகரில் வசித்து வரும் உமா, "எனது வீட்டின் அருகே வசித்து வருபவர்கள் ஒரு நாயை வளர்த்து வருகின்றனர். அந்த நாய் இரவு நேரத்தில் குரைத்து கொண்டே இருக்கும். இதனால் எனது 1½ வயது குழந்தை பல நாட்கள் பதறி எழுந்து அழுது உள்ளது. ஒரு முறை குழந்தை எழுந்து விட்டால் பின்னர் குழந்தையை தூங்க வைப்பது கஷ்டமாக இருக்கும். இரவில் நாய் குரைத்து கொண்டு இருப்பது பற்றி பக்கத்து வீட்டுக்காரர்களிடம் நான் பல முறை கூறியுள்ளேன். ஆனால் அவர்கள் கண்டுகொள்ளவே இல்லை. அவர்களிடம் சொல்லி சொல்லி நான் அலுத்து போய் விட்டேன். ஆசைக்காக நாய் வளர்ப்பவர்கள் மற்றவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தாதவாறு வளர்க்க வேண்டும். பகலில் நாயை வீட்டிற்குள் வைத்து வளர்ப்பவர்கள், இரவில் வெளியே விடுவது ஏன்?"என்றார்.
நாய் வளர்க்க உரிமம்
பெங்களூரு ஒசரோட்டில் வசித்து வரும் சூரி, "எனது பக்கத்து வீட்டில் வசித்து பெண்ணுக்கு நாய் வளர்ப்பதில் ஆர்வம் அதிகம். அவரது நண்பர்கள் யாராவது வெளியூருக்கு சென்றால் அவர்கள் வளர்த்து வரும் நாய்களையும், அந்த பெண் தனது வீட்டிற்கு அழைத்து வந்து விடுகிறார். தினமும் 20 நாய்கள் இரவில் குரைத்து கொண்டே இருக்கின்றன. இதனால் எங்களுக்கு பிரச்சினை ஏற்படுகிறது. இதுபற்றி அந்த பெண்ணிடம் கேட்ட போது தன்னிடம் நாய் வளர்க்க உரிமம் இருப்பதாக கூறுகிறார். அந்த பெண் வளர்த்து வரும் நாய்களால் எங்கள் பகுதி மக்களின் தூக்கம் போய் விட்டது. அந்த நாய்களை வேறு இடத்திற்கு மாற்றினால் நல்லது" என்றார்.
நன்றி உணர்வுள்ள ஜீவன்
சிக்கமகளூரு மாவட்டம் கடூரில் வசித்து வரும் தனலட்சுமி, "எங்கள் வீட்டில் கடந்த 3 ஆண்டுகளாக பைரவா என்ற பெயரில் ஒரு நாயை வளர்த்து வருகிறோம். எனது மகள்கள், மகன் வெளியூரில் வசிக்கின்றனர். எனது கணவரும் வேலை விஷயமாக அடிக்கடி வெளியூருக்கு சென்று விடுவார். இதனால் தனியாக வீட்டில் இருக்கும் எனக்கு நாய் தான் பாதுகாப்பாக இருக்கும். இரவு நேரத்தில் தேவையின்றி குரைத்து யாருக்கும் தொந்தரவு கொடுத்தது இல்லை. விலை உயர்ந்த நாய்கள் தான் கட்டிப்போட்டால் குரைத்து கொண்டே இருக்கும். நாய்களுக்கு அறிவு திறன் அதிகம். நன்றி உணர்வும் அதிகம். நாம் வளர்ப்பதை பொறுத்தே நாய்கள் நடந்து கொள்ளும். எனவே நாய் வளர்ப்போர் அதை கவனித்து நாய்களை வளர்க்க முன்வர வேண்டும்" என்றார்.
அனுமதி பெறுவது முக்கியம்
பெங்களூரு மாநகராட்சியில் பணியாற்றும் கால்நடை துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "பெங்களூருவில் வீடுகளில் நாயை வளர்க்க மாநகராட்சியிடம் அனுமதி பெறுவது முக்கியம். பெரும்பாலோனார் அனுமதி பெறாமல் வீடுகளில் நாயை வளர்த்து வருகின்றனர். வீடுகளில் வளர்க்கப்படும் நாய்களுக்கு ஏதாவது உடல்நலக்குறைவு ஏற்பட்டால் உடனடியாக நாயை தெருவில் விட்டு செல்கின்றனர். வீட்டில் வளர்க்கும் நாய்களுக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும். நாய் மீது வரும் கிருமிகளை சுத்தம் செய்ய வேண்டும். அடுக்குமாடி குடியிருப்புகளில் உள்ள வீடுகளில் நாய்களை வளர்க்க அடுக்குமாடி குடியிருப்பு சங்கம் எதிர்ப்பு தெரிவிக்க முடியாது. வீட்டில் வளர்க்கும் நாய்களால் பக்கத்து வீட்டினருடன் பிரச்சினை ஏற்பட்டால் பேசி தீர்க்க வேண்டும். அதைவிட்டு மோதலில் ஈடுபடுவது சரியாக இருக்காது" என்றார்.