அதிருப்தியில் தேவேந்திர பட்னாவிஸ்? பா.ஜனதா கொண்டாட்டத்தில் பங்கேற்வில்லை
மராட்டியத்தில் ஆட்சியை பிடித்தற்காக நடந்த பா.ஜனதா அலுவலகத்தில் நடந்த கொண்டாட்டத்தில் தேவேந்திர பட்னாவிஸ் கலந்து கொள்ளவில்லை.
மும்பை,
ஏக்நாத் ஷிண்டே மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் பா.ஜனதா ஆதரவுடன் மராட்டியத்தில் ஆட்சி அமைத்து உள்ளனர். நேற்று ஏக்நாத் ஷிண்டே முதல்-மந்திரியாகவும், தேவேந்திரபட்னாவிஸ் துணை முதல்-மந்திரியாகவும் பொறுப்பேற்று கொண்டனர். முன்னதாக ஏக்நாத் ஷிண்டேயை புதிய முதல்-மந்திரி என அறிவித்த போது, தேவேந்திர பட்னாவிஸ் மாநில அரசில் அங்கம் வகிக்க மாட்டேன் என கூறினார். பின்னர் பா.ஜனதா தலைவர் ஜே.பி. நட்டா தேவேந்திர பட்னாவிஸ் துணை முதல்-மந்திரியாக பதவியேற்க வேண்டும் என வலியுறுத்தினார். இதையடுத்து தேவேந்திர பட்னாவிஸ் துணை முதல்-மந்திரியாக பொறுப்பேற்று கொண்டார்.
சிவசோவை உடைத்து மீண்டும் மாநிலத்தில் பா.ஜனதா அதிகாரத்தை கைப்பற்ற தீவிரமாக ஈடுபட்டவர் தேவேந்திர பட்னாவிஸ். எனவே முதல்-மந்திரி பதவி வழங்கப்படாததால் அவர் அதிருப்தியில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்தநிலையில் மும்பை பா.ஜனதா தலைமை அலுவலகத்தில் மராட்டியத்தில் மீண்டும் ஆட்சியை கைப்பற்றியதற்காக கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. இதில் தேவேந்திர பட்னாவிஸ் கலந்து கொள்ளவில்லை. இந்தநிலையில் 3-ந் தேதி, 4 ஆம் தேதி நடைபெற உள்ள சிறப்பு சட்டபேரவை கூட்டத்திற்கான ஏற்பாடுகளை செய்வதில் தேவேந்திர பட்னாவிஸ் மும்ரமாக இருப்பதால் கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறியுள்ளன.