கலெக்டரை பார்த்து மது குடித்து இருக்கிறீர்களா? என கேட்ட மந்திரி கேட்டதால் சர்ச்சை

மாவட்ட கலெக்டரை பார்த்து மது குடித்து இருக்கிறீர்களா? என்று மந்திரி கேட்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. மந்திரிக்கு எதிர்க்கட்சியினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Update: 2022-10-29 14:44 GMT

மும்பை,

மராட்டியத்தில் வழக்கத்துக்கு மாறாக இந்த மாதத்திலும் தென்மேற்கு பருவமழை நீடித்தது. கனமழை பெய்ததால் வேளாண் பயிர்கள் சேதம் அடைந்து விவசாயிகள் கண்ணீரில் தத்தளித்து வருகின்றனர். விவசாயிகளின் துயர் துடைக்க பயிர்சேதம் குறித்து கணக்கெடுப்பு பணிக்கு முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே உத்தரவிட்டு உள்ளார்.

இந்தநிலையில் மாநில வேளாண் மந்திரி அப்துல் சத்தார், பீட் மாவட்டத்தில் உள்ள கேவ்ரே தாலுகாவில் சுற்றுப்பயணம் செய்தபோது, அங்கு நடந்த பயிர் சேதம் தொடர்பான ஆய்வு கூட்டத்தில் கலந்துகொண்டார். இந்த கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் சர்மா மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் கலந்து கொண்ட மந்திரி உள்ளிட்டவர்களுக்கு தேநீர் வழங்கப்பட்டது. ஆனால் கலெக்டர் தனக்கு தேநீர் வேண்டாம் என்று தெரிவித்தார். உடனே அருகில் இருந்த மந்திரி அப்துல் சத்தார், "நீங்கள் மது குடித்து இருக்கிறீர்களா? என்று கலெக்டரை பார்த்து கேட்டார். இதனால் கலெக்டர் அதிர்ச்சி அடைந்தார். மேலும் கூட்டத்தில் சலசலப்பு உண்டானது.

இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகி வருகிறது. மந்திரியின் இந்த சர்ச்சை பேச்சுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளன. இதுபற்றி மாநில காங்கிரஸ் பொதுச்செயலாளர் சச்சின் சாவந்த், "இது மழை வெள்ளச்சேத சுற்றுப்பயணமா? அல்லது மது குடிக்கும் சுற்றுப்பயணமா?" என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்