தி.மு.க. முன்னாள் நிர்வாகியை வெட்டிக்கொல்ல முயற்சி-எதிர்கோஷ்டி கும்பலுக்கு வலைவீச்சு

பெங்களூருவில் தி.மு.க. முன்னாள் நிர்வாகியை வெட்டிக் கொல்ல முயன்ற பயங்கரம் நடந்துள்ளது இதுதொடர்பாக எதிர்கோஷ்டியை சேர்ந்த கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Update: 2023-09-04 21:53 GMT

பெங்களூரு:-

தி.மு.க. முன்னாள் நிர்வாகி

தமிழ்நாடு மதுரையை சேர்ந்தவர் வி.கே.குருசாமி (வயது 55). இவர் மதுரை மாநகராட்சி மண்டல தி.மு.க. தலைவராக பதவி வகித்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மதுரையில் இருந்து பெங்களூருவுக்கு விமானத்தில் குருசாமி வந்திருந்தார்.

நேற்று மாலை 5.30 மணி அளவில் பெங்களூரு கம்மனஹள்ளி மெயின் ரோட்டில் உள்ள ஒரு ஓட்டலில் ரியல் எஸ்டேட் ஏஜென்ட் ஒருவருடன் நின்று குருசாமி பேசிக்கொண்டு இருந்தார். அப்போது அங்கு காரில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் குருசாமியை கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாக தாக்கிவிட்டு தப்பி சென்று விட்டது.

தீவிர சிகிச்சை

இதில் பலத்த காயம் அடைந்த குருசாமி ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார். உடனே அப்பகுதி மக்கள் அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தகவல் அறிந்ததும் பானசாவடி போலீசார் விரைந்து வந்து சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினார்கள். அப்போது குருசாமி மீது மதுரையில் போலீஸ் நிலையங்களில் வழக்குகள் இருப்பது தெரியவந்தது. எனவே எதிர் கோஷ்டியைச் சேர்ந்த கும்பல் அவரை கொலை செய்ய முயற்சித்து இருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர்.

2 தனிப்படைகள் மதுரை விரைந்தன

இதுகுறித்து பெங்களூரு கிழக்கு மண்டல துணை போலீஸ் கமிஷனர் பீமா சங்கர் குலைத் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழ்நாடு மதுரையை சேர்ந்த குருசாமியை பெங்களூரு பானசாவடி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வைத்து ஆயுதங்களால் தாக்கி கொலை செய்ய முயற்சி நடந்துள்ளது. தமிழக பதிவு எண்ணை கொண்ட காரில் வந்த கும்பல் இந்த வெறிச்செயலில் ஈடுபட்டுள்ளனர். மதுரையில் இருந்து வந்த கும்பல் இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து அந்த கும்பலை பிடிக்க மதுரைக்கு 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. அந்த தனிப்படைகள் மதுரைக்கு விரைந்துள்ளன.

கூடிய விரைவில் இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் கைது செய்யப்படுவார்கள். கம்மனஹள்ளி பகுதியில் வீடு வாங்க குருசாமி திட்டமிட்டிருந்ததும், இதனால் வீடு பார்க்க அவர் பெங்களூருவுக்கு வந்ததும், இதுபற்றி முன்கூட்டியே தெரிந்தவர்கள் அவரை வெட்டிக் கொல்ல முயன்றுள்ளனர். இதில் அவர் படுகாயம் அடைந்துள்ளார். மேலும் அவருடன் நின்ற ரியல் எஸ்டேட் ஏஜென்டு லேசான காயத்துடன் உயிர் தப்பித்துள்ளார். சம்பவம் தொடர்பாக பானசாவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்

Tags:    

மேலும் செய்திகள்