போலீஸ் அதிகாரிகயை கடுமையாக கடிந்து கொண்ட டி.கே.சிவக்குமார்

கடந்த ஆட்சியில் நடந்த விவகாரங்களை கூறி போலீஸ் அதிகாரிகளிடம் டி.கே.சிவக்குமார் கடுமையாக நடந்து கொண்டார்.

Update: 2023-05-23 22:07 GMT

பெங்களூரு:-

போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை

கர்நாடகத்தில் முதல்-மந்திரி சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி அமைந்துள்ளது. இதையடுத்து, பெங்களூரு விதானசவுதாவில் உயர் போலீஸ் அதிகாரிகளுடன், முதல்-மந்திரி சித்தராமையா, துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் நேற்று மதியம் ஆலோசனை நடத்தினார்கள்.

மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு பாதுகாப்பு, சட்டவிரோத செயல்கள், சைபர் கிரைம் குற்றங்களை தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள், ரவுடிகளின் அட்டூழியத்தை ஒழித்து மக்கள் அமைதியாக வாழ என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் பேசியதாவது:-

காவி மயமாக்க முயற்சி

கர்நாடகத்தில் பாகல்கோட்டை, விஜயாப்புரா, மங்களூருவில் போலீசார் காவி உடை அணிந்து கொண்டு போலீஸ் துறைக்கு அவமானம் செய்தீர்கள். இந்த கூட்டத்திற்கு நீங்கள் காவி உடை அணிந்து வந்திருக்கலாம். நாட்டை பற்றி போலீசாருக்கு நன்மதிப்பு, தேசப்பற்று இருந்தால், தேசிய கொடியை அணிந்து கொண்டு பணியாற்றுங்கள். போலீஸ் துறையை காவி மயமாக்க முயற்சிக்கிறீர்களா?.

காங்கிரஸ் ஆட்சியில் போலீஸ் துறையை காவி மயமாக்க அனுமதிக்க மாட்டோம். அதற்கு சாத்தியமும் இல்லை. சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேட்டில் சிக்கிய ஒரு கூடுதல் போலீஸ் டி.ஜி.பி., பேப்பரை வாய்க்குள் போட்டு விழுங்கி இருக்கிறார். இதன்மூலம் போலீஸ் துறை எப்படி கெட்டு போய் இருக்கிறது என்பதை அறிந்து கொள்ள முடிகிறது.

போலீஸ் துறையில் மாற்றம்

கடந்த ஆட்சியில் பிரியங்க் கார்கேவுக்கு எவ்வளவு தொல்லை கொடுத்தீர்கள். கர்நாடக போலீஸ் துறைக்கு நல்ல பெயர் இருக்கிறது. இந்த நல்ல பெயரை நீங்களே கெடுப்பதற்கு முயற்ச்சி செய்கிறீர்கள். எங்கு சென்றாலும் பணம், பணம் தான். காங்கிரஸ் ஆட்சியில் இது சரி செய்ய வேண்டும். காங்கிரஸ் அரசு மீது மக்கள் மிகப்பெரிய மாற்றத்தை எதிர்பார்த்து உள்ளனர்.

அது போலீஸ் துறையில் இருந்தே தொடங்க வேண்டும். காங்கிரஸ் ஆட்சியில் மாற்றம் ஏற்பட்டு இருப்பதற்கான தகவல் போலீஸ் துறை மூலமாக மக்களுக்கு செல்ல வேண்டும். கடந்த ஆட்சியில் நீங்கள் செய்த தவறுகள், இந்த ஆட்சியில் தொடர சாத்தியமில்லை. கடந்த ஆட்சியில் பே-சி.எம். விவகாரத்தில் என்னிடமும், சித்தராமையாவிடமும் போலீசார் எப்படி நடந்து கொண்டீர்கள் என்பது தெரியும்.

வழக்குப்பதிவு செய்யவில்லை

காங்கிரஸ் தொண்டர்கள் மீது ஆயிரக்கணக்கான பொய் வழக்குகள் பதிவு செய்யப்பட்டதும் தெரியும். என்னையும், சித்தராமையாவைவே விடவில்லை, நீங்கள் சாதாரண மக்களை விட்டு வைப்பீர்களா?. எங்கள் மீது வழக்குப்பதிவு செய்வது, ஆளும் கட்சி மீது வழக்குப்பதிவு செய்யாமல் இருந்தீர்கள். திப்பு சுல்தானை கொலை செய்தது போல், சித்தராமையாவையும் முடிக்க வேண்டும் என்று கூறியவர் மீது வழக்குப்பதிவாகவில்லை.

எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஒருவரை கொலை செய்ய தூண்டும் விதமாக பேசியது குற்றம் இல்லையா?. போலீசார் என்னவெல்லாம் செய்தீர்கள் என்பது பற்றி என்னிடம் ஆதாரங்கள் இருக்கிறது. நாங்கள் எல்லாவற்றையும் கவனித்துள்ளோம். இதுவெல்லாம் எங்கள் ஆட்சியில் நடக்காது. உங்கள் செயல்பாடு, நடவடிக்கைகளில் மாற்றம் செய்து கொள்ள வேண்டும். நீங்கள் மாறியே தீர வேண்டும்.

கடுமையான நடவடிக்கை

அதற்காக நாங்கள் பழிவாங்கும் செயல்களில் ஈடுபட மாட்டோம். போலீசார் நேர்மையாக பணியாற்றினால், நாங்கள் உங்களுடன் கைகோர்த்து செயல்படுவோம். காங்கிரஸ் அரசு மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். அதனை தக்க வைத்து கொள்ளுங்கள்.

ஏதேனும் தவறான செயல்களில் ஈடுபடும் போலீசார் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அதில் எந்த பாரபட்சமும் பார்க்கப்படாது.

இவ்வாறு டி.கே.சிவக்

குமார் பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்