அரசு பஸ்களில் மராட்டிய டிக்கெட்டுகள் வினியோகம் போக்குவரத்து அதிகாரிகள் உள்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு
அரசு பஸ்களில் மராட்டிய டிக்கெட்டுகள் வினியோகம் செய்ததாக போக்குவரத்து அதிகாரிகள் உள்பட 6 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
பெங்களூரு:
கதக் மாவட்டத்தில் கர்நாடக வடமேற்கு சாலை போக்குவரத்து துறை சார்பில் அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் கதக் மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அரசு பஸ்களில் 'ஜெய்-மகாராஷ்டிரா' என்று அச்சிடப்பட்ட டிக்கெட்டுகள் வினியோகம் செய்யப்பட்டது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. இதையடுத்து இந்த சம்பவம் குறித்து கர்நாடக போக்குவரத்து மண்டல கட்டுப்பாட்டாளர் விசாரணை நடத்த உத்தரவிட்டார்.
இந்த நிலையில் கர்நாடகம், மராட்டியம், தெலுங்கானா ஆகிய மாநிலங்களுக்கு அரசு பஸ் டிக்கெட்டுகள் ஒரே நிறுவனம் சார்பில் அச்சிடப்பட்டு வினியோகிக்கப்படுகிறது. தவறுதலாக மராட்டிய டிக்கெட்டுகள் கதக் மற்றம் ரோனா பஸ் டிப்போக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதை கவனிக்காமல் கன்டக்டர்கள் வினியோகம் செய்துள்ளது தெரியவந்தது. இந்த நிலையில் டிக்கெட்டை கவனிக்காமல் வினியோகம் செய்ததாக கூறி, கதக் மற்றும் ரோனா பஸ் டிப்போக்களை சேர்ந்த போக்குவரத்து அதிகாரிகள் 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.