6 எம்.எல்.ஏ.க்களுக்கு மீண்டும் டிக்கெட் வழங்கப்படாது என கூறினேனா?
கர்நாடக சட்டசபை தேர்தலில் 6 எம்.எல்.ஏ.க்களுக்கு மீண்டும் டிக்கெட் வழங்கப்படாது என கூறினேனா? என்று எடியூரப்பா கேள்வி எழும்பியுள்ளார்.
ராய்ச்சூர்:-
எடியூரப்பா விளக்கம்
கர்நாடக சட்டசபை தேர்தல் மே மாதம் நடைபெற உள்ள நிலையில், தற்போது எம்.எல்.ஏ.வாக இருக்கும் 6 பேருக்கு மீண்டும் பா.ஜனதா சார்பில் போட்டியிட டிக்கெட் வழங்கப்படாது என்று முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா கூறி இருப்பதாக தகவல்கள் வெளியானது. இதனால் எம்.எல்.ஏ.க்கள் மத்தியில் அதிர்ச்சி உண்டானது. இதுகுறித்து ராய்ச்சூர் மாவட்டத்தில் விஜய சங்கல்ப யாத்திரையின்போது எடியூரப்பாவிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:-
சட்டசபை தேர்தலில் யார்? போட்டியிடுவார்கள் என்பதை பா.ஜனதா மேலிடம் தான் முடிவு செய்யும். சட்டசபை தேர்தலில் போட்டியிடும் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் பிரதமர் மோடி, அமித்ஷா மற்றும் பா.ஜனதா தேர்தல் குழுவுக்கு அனுப்பி வைக்கப்படும். அவர்கள் அந்த பட்டியலை இறுதி செய்வார்கள். 6 எம்.எல்.ஏ.க்கள் தேர்தலில் போட்டியிட மீண்டும் டிக்கெட் வழங்கப்படாது என கூறவில்லை. சட்டசபை தேர்தல் தொடர்பாக நடந்த ஆய்வின்படி தேர்தலில் வெற்றி பெற தகுதியானவர்களுக்கு மட்டுமே மீண்டும் டிக்கெட் வழங்க கட்சி தலைமை முடிவு செய்திருப்பதாக தான் கூறினேன். பா.ஜனதாவுக்கு மக்கள் முழு ஆதரவு அளித்து வருவதால், சட்டசபை தேர்தலில் மீண்டும் வெற்றி பெறுவது உறுதி. இவ்வாறு அவர் கூறினார்.