கர்நாடகத்தின் 17-வது முதல்-மந்திரி தரம்சிங்

கர்நாடகத்தின் 17-வது முதல்-மந்திரி தரம்சிங் குறித்து இங்கு காண்போம்.

Update: 2023-04-22 18:45 GMT

பெங்களூரு:

கர்நாடகத்தின் 17-வது முதல்-மந்திரியாக இருந்தவர், தரம்சிங். இவர் கலபுரகி மாவட்டம் ஜேவர்கி தாலுகா நிலோகி கிராமத்தில் கடந்த 1936-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 25-ந் தேதி பிறந்தார். ஐதராபாத்தில் சட்டம் பயின்ற இவர், தனது அரசியல் பயணத்தை கலபுரகி மாவட்ட நகரசபைக்கு நடைபெற்ற உறுப்பினர் தேர்தலில் இருந்து தொடங்கினார்.

இந்த தேர்தலில் சுயேச்சையாக களம் இறங்கிய இவர், தனது சகோதரரை வீழ்த்தி வெற்றி பெற்றார். இதைதொடர்ந்து தன்னை பீமசேனா என்ற சமூக நீதிக்கட்சியுடன் இணைத்துக் கொண்டார். அக்கட்சியில் ஐதராபாத்-கர்நாடக பகுதி இளைஞர் அணி தலைவராக அவர் நியமிக்கப்பட்டார்.

பின்னர் 1960-ம் ஆண்டு அவர் காங்கிரசில் இணைந்தார். 1978-ம் ஆண்டு நடைபெற்ற மாநில சட்டசபை தேர்தலில் கலபுரகி மாவட்டம் ஜேவர்கி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட அவர் வெற்றி பெற்று எம்.எல்.ஏ. ஆனார். மேலும் அப்போது முதல்-மந்திரியாக இருந்த தேவராஜ் அர்ஸ் மந்திரி சபையில் உள்துறை மந்திரியாக பொறுப்பேற்றார். இதைதொடர்ந்து நடந்த 6 சட்டசபை தேர்தல்களில் காங்கிரஸ் சார்பில் அதே தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாக இவர் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. மேலும் முதல்-மந்திரிகளான குண்டுராவ், பங்காரப்பா, வீரப்பமொய்லி ஆகியோரது மந்திரி சபையில் கலால்துறை, சமூகநலன், நகரவளர்ச்சி துறை, நிதித்துறை ஆகிய பதவிகளை வகித்து உள்ளார். மேலும் கடந்த 1990-ம் ஆண்டு கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்டார்.

அவரது தலைமையில் கடந்த 1999-ம் ஆண்டு சட்டசபை தேர்தலை காங்கிரஸ் கட்சி சந்தித்தது. அப்போது முதல்-மந்திரி பதவிக்கான பெயர் பரிந்துரையில் இவரும் இடம்பெற்றார். ஆனால் இந்த பந்தயத்தில் மூத்த தலைவரான எஸ்.எம்.கிருஷ்ணாவுக்கே அதிர்ஷ்டம் கிடைத்தது. எஸ்.எம்.கிருஷ்ணா முதல்-மந்திரியாக பதவி ஏற்றார். அவரது மந்திரி சபையில் பொதுப்பணித்துறை மந்திரி பதவி தரம்சிங்குக்கு வழங்கப்பட்டது. அந்த பதவியில் சிறப்பாக செயல்பட்டார்.

2004-ந் தேதி நடைபெற்ற சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 65 தொகுதிகளில் மட்டுமே வெற்றிபெற்றது. மேலும் எந்த கட்சிக்கும் தனி மெஜாரிட்டி கிடைக்கவில்லை. இதனால் 58 இடங்களில் வெற்றிபெற்ற ஜனதாதளம்(எஸ்) கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்தது. அப்போது முதல்-மந்திரி வேட்பாளர் பெயருக்கு காங்கிரஸ் சார்பில் தரம்சிங் மற்றும் ஜனதாதளம்(எஸ்) கட்சி சார்பில் சித்தராமையாவும் முன் நிறுத்தப்பட்டனர். ஆனால் சித்தராமையாவிற்கு முதல்-மந்திரி பதவி கொடுக்க விரும்பாத ஜனதா தளம்(எஸ்) கட்சியின் தேசிய தலைவர் தேவேகவுடா, தரம்சிங்கிற்கு தனது ஆதரவை தெரிவித்தார். 2 ஆண்டுகள் சிறப்பாக நடந்த இந்த கூட்டணி ஆட்சி பின்னர் தந்தை-மகன் கவுரவ பிரச்சினையால் கவிழும் நிலை ஏற்பட்டது. அதாவது தேவேகவுடாவின் மகனான குமாரசாமி, காங்கிரஸ் கட்சிக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கி கொண்டு பா.ஜனதா ஆதரவுடன் முதல்-மந்திரியாக பொறுப்பேற்றார். இதனால் கடந்த 2006-ம் ஆண்டு ஜனவரி 28-ந் தேதி தனது முதல்-மந்திரி பதவியை தரம்சிங் ராஜினாமா செய்தார்.

இதைதொடர்ந்து காங்கிரஸ் கட்சி சார்பில் சட்டசபை எதிர்க்கட்சி தலைவராக இவர் நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் அனுமதியின்றி சுரங்கம் நடத்த அனுமதி வழங்கியதால் தரம்சிங் ஆட்சியில் அரசுக்கு ரூ.23.22 கோடி இழப்பு ஏற்பட்டதாக லோக்-அயுக்தா கோர்ட்டு உறுதி செய்தது. இதைதொடர்ந்து அரசுக்கு ஏற்பட்ட இழப்பை சம்பந்தப்பட்டவர்களிடம் இருந்து வசூலிக்க லோக்-அயுக்தா கோர்ட்டு உத்தரவிட்டது. மேலும் 2009-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் கலபுரகி தொகுதியில் போட்டியிட்ட தரம்சிங் எம்.பி.யாக வெற்றி பெற்றார். இந்த நிலையில் உடல்நலக்குறைவால் கடந்த ஆண்டு (2017) ஜூலை மாதம் 27-ந் தேதி தரம்சிங் உயிர் இழந்தார். 

Tags:    

மேலும் செய்திகள்