சிக்கமகளூருவில் தத்தா பீடத்தில் பக்தர்கள் சாமி தரிசனம்
தத்தா மாலை நிகழ்ச்சியையொட்டி சிக்கமகளூரு சந்திரதிரிகோண மலையில் உள்ள தத்தா பீடத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். சிக்கமகளூரு நகரில் ஸ்ரீராமசேனை அமைப்பினர் பிரமாண்ட பேரணியும் நடத்தினர்.
சிக்கமகளூரு:-
தத்தா மாலை நிகழ்ச்சி
சிக்கமகளூரு அருகே சந்திர திரிகோண மலையில் தத்தா குகைக்கோவில் உள்ளது. இங்கு இந்து மற்றும் முஸ்லிம் மக்கள் வழிபாடு நடத்தி வருகிறார்கள். மேலும் தத்தா குகைக்கோவிலை இருதரப்பினரும் சொந்தம் கொண்டாடி வருகிறார்கள். தத்தா பீடத்தை இந்துக்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும், விரைவில் அர்ச்சகர் நியமிக்க வேண்டும் என்றும் இந்து அமைப்பினர் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.
இந்த நிலையில் தத்தா குகைக்கோவிலில் தத்தா மாலை நிகழ்ச்சி கடந்த திங்கட்கிழமை தொடங்கியது. இதில் ஸ்ரீராமசேனை அமைப்பினர் மாலை அணிந்து விரதம் இருந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் ஸ்ரீராமசேனை அமைப்பினர் சிக்கமகளூரு நகரில் அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்களை யாசகமாக பெற்றனர்.
பிரமாண்ட பேரணி
இந்த நிலையில் நேற்று தத்தா மாலை நிகழ்ச்சி நடந்தது. இதில் மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். பின்னர் சிக்கமகளூரு நகரில் ஸ்ரீராமசேனை அமைப்பினரின் பிரமாண்ட ஊர்வலம் நடந்தது. இதில் ஸ்ரீராமசேனை தலைவர் பிரமோத் முத்தாலிக் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அவர்கள், பசவனஹள்ளியில் உள்ள சங்கர் மடத்தில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டனர். எம்.ஜி.ரோடு வழியாக ஆசாத் பூங்கா வரை ஊர்வலம் சென்றது. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.
பலத்த பாதுகாப்பு
பின்னர் விரதம் இருந்த பக்தர்கள், மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பக்தர்கள் சந்திர திரிகோண மலைக்கு சென்று தத்தா பீடத்தில் தரிசனம் செய்தனர். சந்திர திரிகோண மலையில் ஆயிரக்கணக்கான இந்து அமைப்பினர் காவி கொடியுடன் வந்ததால், எங்கு பார்த்தாலும் காவி மயமாக இருந்தது.
தத்தா மாலை நிகழ்ச்சியையொட்டி சிக்கமகளூருவில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உமா பிரசாந்த் தலைமையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.