தேவிரம்மன் கோவில் திருவிழா நாளை தொடங்குகிறது

தீபாவளியையொட்டி தேவிரம்மன் கோவில் திருவிழா நாளை (திங்கட்கிழமை) தொடங்கி 4 நாட்கள் நடக்க உள்ளது. உடுக்கை அடித்தால் கோவில் கதவு திறக்கும் நிகழ்வு வருகிற 25-ந்தேதி நடக்கிறது.

Update: 2022-10-22 18:45 GMT

சிக்கமகளூரு:

தேவிரம்மன் கோவில்

சிக்கமகளூருரு அருகே மல்லேனஹள்ளி பகுதியை அடுத்த பிண்டுகா கிராமத்தில் பிரசித்தி பெற்ற தேவிரம்மன் கோவில் அமைந்துள்ளது. தீபாவளி பண்டிகையையொட்டி இந்த கோவிலில் 4 நாட்கள் திருவிழா நடப்பது வழக்கம். அதன்படி தீபாவளியையொட்டி நாளை (திங்கட்கிழமை) தேவிரம்மன் கோவிலில் திருவிழா தொடங்குகிறது. நாளை தொடங்கி 27-ந்தேதி வரை 4 நாட்கள் நடக்கிறது.

இந்த தேவிரம்மன் கோவிலின் பின்புறம் 2000 அடி உயர மலை உள்ளது. இந்த மலை உச்சியிலும் தேவிரம்மன் கோவில் உள்ளது. இந்த நிலையில், திருவிழாவையொட்டி நாளை லட்சக்கணக்கான பக்தர்கள் மலைக்கு சென்று தேவிரம்மனை வழிபட உள்ளனர்.

உடுக்கை அடித்தால் கதவு திறக்கும்

கர்நாடகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான மக்கள் திரண்டு வந்து சாமி தரிசனம் செய்வார்கள். இதையொட்டி மாவட்ட நிர்வாகம் சார்பில் மலையில் குடிநீர், கழிவறை, வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் மலைக்கு பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

நாளை மலையில் உள்ள தேவிரம்மன் கோவிலில் பக்தர்கள் ெகாண்டு செல்லும் விறகுகள் மற்றும் நெய், எண்ணெய் மூலம் தீபம் ஏற்றப்படும். இதையடுத்து மலை அடிவாரத்தில் உள்ள தேவிரம்மன் கோவிலில் விசேஷ பூஜைகள் நடக்கும். பின்னர் 25-ந்தேதி தேவிரம்மனுக்கு பம்பை முழங்க சிறப்பு அபிஷேகம் நடக்கும். இந்த பூஜையின் போது கோவில் கருவறையின் கதவு சாத்தப்பட்டிருக்கும். அப்போது உடுக்கை சத்தம் கேட்டு கோவில் கருவறையின் கதவு தானாக திறக்கும் அதிசயம் நிகழ்வு நடக்கும். இதனை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வார்கள்.

தீமிதி திருவிழா

இதையடுத்து 26-ந்தேதி தேவிரம்மன் கோவில் முன்பு தீமிதி திருவிழா நடக்கிறது. இதில் விரதம் இருக்கும் பக்தர்கள் தீக் குண்டத்தில் இறங்குவார்கள். இதையடுத்து 27-ந்தேதி சுற்றுவட்டார கிராமங்களில் தேவிரம்மன் கோவில் பல்லக்கு ஊர்வலம் நடைபெற உள்ளது.

தேவிரம்மன் கோவில் திருவிழாவையொட்டி சிக்கமகளூருவில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்