போட்டித்தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களின் தற்கொலையை தடுக்க மாவட்ட நிர்வாகம் எடுத்த வினோத முடிவு

ஜேஇஇ, நீட் போன்ற நுழைவுத்தேர்வுகள் மற்றும் போட்டித்தேர்வுகளுக்கு மாணவர்கள் தயாராகி வருகின்றனர்.

Update: 2023-08-18 12:22 GMT

ஜெய்ப்பூர்,

நாடு முழுவதும் போட்டித்தேர்வுகள் மற்றும் ஜேஇஇ, நீட் போன்ற நுழைவுத்தேர்வுகளுக்கு லட்சக்கணக்கானோர் தயாராகி வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் தனியார் பயிற்சி மையங்களில் சேர்ந்து தேர்வுகளில் வெற்றிபெற பயிற்சி எடுத்து வருகின்றனர்.

குறிப்பாக, ராஜஸ்தான் மாநிலம் கோடா மாவட்டத்தில் அதிக அளவில் பயிற்சி மையங்கள் உள்ளன. நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து இந்த மாவட்டத்திற்கு வரும் மாணவர்கள் இங்கு தங்கி பயிற்சி மையங்களில் நீட் உள்ளிட்ட நுழைவுத்தேர்வுகளில் வெற்றிபெற பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால், கோடா மாவட்டத்தில் நூற்றுக்கணக்கான தனியார் தங்கும் விடுதிகள் அதிக அளவில் உள்ளன. விடுதிகளில் தங்கும் மாணவர்கள் அங்குள்ள தனியார் பயிற்சி மையங்களில் பயின்று வருகின்றனர்.

இவ்வாறு, விடுதிகளில் தங்கி போட்டித்தேர்வுகளுக்கும், நுழைவுத்தேர்வுகளுக்கும் தயாராகி வரும் மாணவர்களில் சிலர் மன அழுத்தம் காரணமாக தற்கொலை போன்ற தவறான முடிவெடுத்து தங்கள் உயிரை மாய்த்துக்கொள்ளும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன.

அந்த வகையில், நடப்பு ஆண்டு மட்டும் கோடா மாவட்டத்தில் தங்கி போட்டித்தேர்வுகளுக்கு பயிற்சி பெற்றுவந்த மாணவர்களில் இதுவரை 12 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். தங்கும் விடுதிகளில் மாணவர்கள் தூக்கிட்டு தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

இந்நிலையில், கோடாவில் போட்டித்தேர்வுகளுக்கு பயிற்சி பெற்று வரும் மாணவர்களின் தற்கொலையை தடுக்க மாவட்ட நிர்வாகம் விநோத முடிவு எடுத்துள்ளது.

அதன்படி, விடுதி நிர்வாகத்தினருடன் ஆலோசனை நடத்திய மாவட்ட நிர்வாகம், விடுதிகளில் சிலீங் பேன்களில் (மின்விசிறி) ஸ்பிரிங்க் (spring - நெகிழ்வு தன்மைகொண்ட சுருள்) அமைக்க முடிவு செய்துள்ளது. பேனில் (மின்விசிறி) அந்த ஸ்பிரிங்கில் தொங்கும் வகையில் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். மேலும், அந்த பேனில் 20 கிலோவுக்கு அதிகமான எடை தொங்கும் நிலை ஏற்பட்டால் அந்த ஸ்பிரிங்க் நெகிழ்வுத்தன்மை கொண்டதாக மாறும். இதன் மூலம் பேனில் (மின்விசிறியில்) மாணவர்கள் தூக்கிடும் முயற்சி முறியடிக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும், பேனில் எச்சரிக்கை ஒலி எழுப்பும் சைரன் போன்ற அமைப்பு நிறுவப்படவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விடுதியில் உள்ள பேனில் மாணவர்கள் யாரேனும் தூக்கிட்டு தற்கொலை செய்ய நினைத்து முயற்சிக்கும்போது ஸ்பிரிங்க் அமைப்பு அதிக எடை தாங்காமல் நெகிழ்வுத்தன்மை ஏற்படும் இதன் மூலம் தற்கொலை முயற்சி முறியடிக்கப்படும் எனவும் பேனில் அமைக்கப்பட்டுள்ள சைரன் எச்சரிக்கை ஒலி எழுப்பும் வகையில் இருக்க வேண்டும் என்றும் விடுதி நிர்வாகத்திற்கு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவையடுத்து விடுதி நிர்வாகங்கள் தங்கும் அறைகளில் உள்ள பேன்களின் ஸ்பிரிங்க் சுருள் அமைக்கும் பணிகளை செய்து வருகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்