மராத்தி மொழிக்கு செம்மொழி அந்தஸ்து கோரிக்கை; பிரதமர் மோடிக்கு மராட்டிய முதல்-மந்திரி கடிதம்
மராத்தி மொழிக்கு செம்மொழி அந்தஸ்து வழங்க வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு மராட்டிய முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே கடிதம் எழுதியுள்ளார்.
புனே,
மராட்டிய முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே பிரதமர் மோடிக்கு இன்று எழுதியுள்ள கடிதத்தில், மராத்தி மொழிக்கு செம்மொழி அந்தஸ்து வழங்குவது பற்றி வலியுறுத்தி உள்ளார். இந்த விவகாரம் மத்திய கலாசார அமைச்சகத்தின் கீழ் நிலுவையில் உள்ளது.
அவர் அந்த கடிதத்தில், மராத்தி மொழிக்கு செம்மொழி அந்தஸ்து வழங்குவது பற்றி 2013-ம் ஆண்டு நவம்பர் 16-ந்தேதியிட்ட விரிவான முன்மொழிவு ஒன்று மத்திய அரசுக்கு, மராட்டிய அரசால் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது என தெரிவித்து உள்ளார்.
இந்த முன்மொழிவின் அடுத்த கட்ட நிலை பற்றி மத்திய அரசிடம் தொடர்ந்து மாநில அரசு வலியுறுத்தி வருகிறது. இந்த கோரிக்கைக்கு ஆதரவு சேர்க்கும் வகையில், மாநில மக்கள் கையெழுத்து பிரசாரம் நடத்தி, 1.20 லட்சம் கையெழுத்துகளை பெற்றுள்ளனர். அவை நாட்டின் ஜனாதிபதிக்கும் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது என கடிதத்தில் தெரிவித்து உள்ளார்.
இந்த ஆண்டின் பிப்ரவரி 3-ந்தேதி இதுபற்றி மத்திய கலாசார மந்திரி கிஷன் ரெட்டி ராஜ்யசபையில் பேசும்போது, இந்த முன்மொழிவானது அமைச்சகத்தின் பரிசீலனையில் உள்ளது என்று கூறினார்.
இதனை கவனத்தில் கொண்டு ஷிண்டே தனது கடிதத்தில், இந்த முன்மொழிவானது நீண்டகாலத்திற்கு பரிசீலனை நிலையிலேயே உள்ளது. இதற்கான ஒப்புதல் மிக விரைவிலேயே வழங்கப்பட வேண்டும் என கேட்டு கொள்கிறேன் என்றும் ஷிண்டே கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளார்.