பெங்களூரு வாணிவிலாஸ் ஆஸ்பத்திரியில் தாய்ப்பாலுக்கு தட்டுப்பாடு

பெங்களூரு வாணிவிலாஸ் ஆஸ்பத்திரியில் உள்ள சேமிப்பு வங்கியில் 6 லிட்டர் மட்டுமே இருப்பு உள்ளதால் தாய்ப்பாலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனைகளும் தாய்ப்பாலுக்கு கோரிக்கை விடுத்துள்ளதால், விழிப்புணர்வை ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2022-05-25 21:37 GMT

பெங்களூரு

பெங்களூரு வாணிவிலாஸ் ஆஸ்பத்திரியில் உள்ள சேமிப்பு வங்கியில் 6 லிட்டர் மட்டுமே இருப்பு உள்ளதால் தாய்ப்பாலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனைகளும் தாய்ப்பாலுக்கு கோரிக்கை விடுத்துள்ளதால், விழிப்புணர்வை ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

தாய்ப்பால் சேமிப்பு வங்கி

பெங்களூரு சிட்டி மார்க்கெட் அருகே வாணிவிலாஸ் மகப்பேறு ஆஸ்பத்திரி உள்ளது. இந்த ஆஸ்பத்திரியில் கடந்த மார்ச் மாதம் தாய்ப்பாலை சேமித்து வைப்பதற்காக ரூ.1 கோடி செலவில் சேமிப்பு வங்கி தொடங்கப்பட்டது. அதாவது பெரும்பாலான குழந்தைகளுக்கு தாய்ப்பால் கிடைக்காத காரணத்தை கருத்தில் கொண்டு தேசிய குடும்ப சுகாதாரத்துறை சார்பில் வாணிவிலாஸ் ஆஸ்பத்திரியில் தாய்ப்பால் சேமிப்பு வங்கி தொடங்கப்பட்டது.

வாணிவிலாஸ் ஆஸ்பத்திரியில் குழந்தை பெற்றுக் கொள்ளும் தாய்களிடம் இருந்தும், சுயமாக முன்வந்து கொடுக்கும் தாய்களிடம் இருந்து அந்த சேமிப்பு வங்கிக்கு தாய்ப்பால் பெற்று வந்தனர். குறை பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகள், ஆதரவற்ற குழந்தைகள், தாய் மரணம் அடைந்ததால் பாதிக்கப்பட்ட பச்சிளம் குழந்தைகள், வாணி விலாஸ் ஆஸ்பத்திரியில் பிறக்கும் குழந்தைகளுக்கும் டாக்டர்களின் அறிவுரைப்படி தாய்ப்பால் வழங்கப்பட்டு வருகிறது.

6 லிட்டர் மட்டுமே இருப்பு

தற்போது வாணிவிலாஸ் ஆஸ்பத்திரியில் உள்ள சேமிப்பு வங்கியில் 6 லிட்டர் தாய்ப்பால் மட்டுமே இருப்பு இருக்கிறது. இந்த தாய்ப்பாலும், ஆஸ்பத்திரி, ஆதரவற்ற குழந்தைகளுக்கு கொடுப்பதற்கு சரியாக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சேமிப்பு வங்கியில் முதலில் 45 லிட்டர் தாய்ப்பால் சேகரிக்கப்பட்டு இருந்ததாகவும், அவற்றில் 30 லிட்டர் பால், 120 பச்சிளம் குழந்தைகளுக்கு கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து தாய்ப்பாலுக்கான தேவை அதிகமானதால் தற்போது வெறும் 6 லிட்டர் மட்டுமே இருப்பு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த சந்தர்ப்பத்தில் வாணி விலாஸ் ஆஸ்பத்திரியில் உள்ள தாய்ப்பால் சேமிப்பு வங்கிக்கு ஏராளமான தனியார் மருத்துவமனைகளில் இருந்து தாய்ப்பாலுக்கு கோரிக்கை விடுக்கும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

தனியார் மருத்துவமனைகள் கோரிக்கை

அதாவது தனியார் மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு தாய்ப்பால் தேவைப்படுவதால், வாணி விலாஸ் ஆஸ்பத்திரியிடம் தாய்ப்பாலுக்கு கோரிக்கை விடுத்து வருவதாகவும் தெரிகிறது. ஆனால் 6 லிட்டர் மட்டுமே இருப்பு உள்ளதால், தனியார் மருத்துவமனைகளுக்கு தாய்ப்பால் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் வாணிவிலாஸ் ஆஸ்பத்திரியில் தாய்ப்பாலை சேமிக்கும் வங்கி இருப்பது பற்றியும், தாய்ப்பாலின் அவசியம் குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அவ்வாறு விழிப்புணர்வை ஏற்படுத்தினால், சேமிப்பு வங்கிக்கு அதிக அளவிலான தாய்ப்பால் கிடைக்கும் எனவும் அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள்.

தானம் செய்ய வேண்டும்

சேமிப்பு வங்கிக்கு ஆரோக்கியமாக இருக்கும் தாய்களிடம் இருந்தே தாய்ப்பால் பெறப்படுகிறது. அதே நேரத்தில் குழந்தை பெற்றெடுத்துள்ள தாய்மார்கள் தாமாக முன்வந்து தாய்ப்பாலை தானம் செய்ய முன்வர வேண்டும் என்றும், அப்போது தாய்ப்பால் கிடைக்காமல் பரிதவிக்கும் பச்சிளம் குழந்தைகளின் பசியை போக்க முடியும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

6 மாதம் சேமித்து வைக்கும் வசதி

வாணிவிலாஸ் ஆஸ்பத்திரியில், தாய்ப்பால் 6 மாதம் கெட்டுப்போகாமல் பாதுகாப்பாக இருக்கும். இந்த தாய்ப்பால் தனியார் நிறுவனங்களில் 150 மில்லி ரூ.6,500 முதல் ரூ.8 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுவதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் வாணிவிலாஸ் ஆஸ்பத்திரியில் பச்சிளம் குழந்தைகளுக்கு இலவசமாக தாய்ப்பால் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்