டெல்லி: மத்திய மந்திரிக்கு ஆபாச வீடியோ காட்டி பணம் கேட்டு மிரட்டிய கும்பல்
டெல்லியில் மத்திய இணை மந்திரிக்கு வாட்ஸ்அப் வழியே ஆபாச வீடியோ காட்டி பணம் கேட்டு கும்பல் ஒன்று மிரட்டிய சம்பவம் நடந்துள்ளது.
புதுடெல்லி,
தொழிலதிபர்கள், பணக்காரர்கள், இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் உள்ளிட்டோரிடம் வீடியோ கால் செய்து, அதில் ஆபாச வீடியோவை காட்டி, மிரட்டி பணம் பறிக்கும் செயலில் சில கும்பல் ஈடுபட்டு வருகிறது.
அதன்படி, ஆபாச வீடியோவுடன் அவர்கள் இருப்பது போன்ற காட்சிகளை இணைத்து பணம் கேட்டு மிரட்டல் விடப்படும். இதில் சிலர் பயந்து போய் பணபரிமாற்றம் செய்து விடுவார்கள். இந்த மிரட்டல் கும்பல், மத்திய உணவு பதப்படுத்தும் தொழில் மற்றும் நீர் சக்தி துறை இணை மந்திரியாக உள்ள பிரகலாத் பட்டேலை நேரடி இலக்காக கொண்டு செயல்பட்டு உள்ளது.
அவரது வாட்ஸ்அப் எண்ணுக்கு வீடியோ கால் ஒன்று வந்துள்ளது. அந்த அழைப்பை ஏற்று அவர் பேசியுள்ளார். ஆனால், இந்த அழைப்பின்போது, அவரை மிரட்டி பணம் பறிக்கும் நோக்கில் ஆபாச வீடியோ ஒன்றை மறுமுனையில் பேசியவர்கள் ஓட விட்டுள்ளனர்.
இதுபற்றி பட்டேலின் தனி செயலாளர் அலோக் மோகன் உடனடியாக, டெல்லி காவல் ஆணையாளருக்கு புகாராக அளித்துள்ளார். இதனை தொடர்ந்து, துரித நடவடிக்கை எடுத்த போலீசார் 2 பேரை கைது செய்தனர்.
அவர்கள் ராஜஸ்தானின் பரத்பூரை சேர்ந்த முகமது வகீல் மற்றும் முகமது சாகிப் என அடையாளம் காணப்பட்டது. இந்த கும்பலை சேர்ந்த முக்கிய நபரான சபீர் என்பவர் தப்பியோடி விட்டார். அவரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.